டெல்லி விமான நிலையத்தின் வெடி பொருட்களைக்கண்டுபிடிப்பதில் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த, மோப்ப நாய் அணியில் முக்கியமான பங்குவகிக்கும் ஸ்னூபி  தன்னுடைய 10 ஆண்டு கால சேவையினை முடித்து கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஓய்வுபெறவுள்ளது.


இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது தான் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். பன்னாட்டு வானுர்தி நிலையமாக செயல்பட்டுவரும் இங்கு தற்போது 46 மில்லியன் பயணிகளைக் கையாளும் வசதிகளைக் கொண்டுள்ளது. இதே அடுத்த  2030-ஆம் ஆண்டுகளில்  100 மில்லியன் பயணிகளைக் கையாளும் என மதிப்பிடப்படுகிறது. பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் டெல்லிதான் முக்கிய விமான நிலையமாக விளங்கும் இந்நேரத்தில், இதன் பாதுகாப்பினை உறுதி செய்வது முக்கியமான மற்றும் அவசியமான ஒன்று. இதற்காக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை எனப்படும் சி.ஐ.எஸ்.எப்பின் கீழ் பணியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள் 24 மணிநேரமும் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதோடு, பயணிகளை ஆய்வு செய்து விமானத்தில் பறப்பதற்கு அனுமதிக்கின்றனர்.



இப்படி பலர் விமானநிலையத்தில் பணிபுரிந்து வந்தாலும், அனைவருக்கும் விருப்பமான மற்றும் வெடி பொருட்களைக் கண்டுபிடிப்பதில் சிறந்த நிபுணத்துவத்துடன் விளங்கி வந்த மோப்ப நாய்தான் ஸ்னூபி. குறிப்பாக டெல்லி விமாநிலையத்தில் ஏதாவது ஒரு இடத்தில் பை அல்லது மர்மப்பொருட்கள் ஏதேனும் ஒன்று இருப்பின் முதலில், அங்கு பணியினைத் தொடங்குவது ஸ்னூபிதான். தன்னுடைய மோப்ப சக்தி மூலம் பதுக்கி வைத்திருக்கும்  எந்த வெடிப்பொளையும் கண்டுபிடிப்பதில் வல்லமைப்பெற்று விளங்கி வந்தது ஸ்னூபி. ஸ்னூபி கண்டுபிடித்தப்பிறகுதான் அடுத்ததாக மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை மற்றும் வெடிப்பொருள் நிபுணர்கள் விமான நிலையத்தில் இருக்கும் மர்மப்பொருளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள்.


தன்னுடைய திறமையின் மூலம் இதுவரை பல வெடிப்பொருள்களை கண்டுபிடித்துள்ளதாகவும், அனைவருக்கும் விருப்பமான நண்பனாக விளங்கிய ஸ்னூபி ஓய்வு பெறப்போவதாக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.  மேலும் ”எங்களுக்கு மட்டுமில்லை விமான நிலையத்திற்கு வரும்  அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் இருந்தது ஸ்னூபி. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியும்  ஸ்னூபியின் ரசிகர் பட்டாளத்தில் ஒருவர்தான். இவர் எப்பொழுது விமானநிலையத்திற்கு வந்தாலும் இதனைப்பார்க்காமலும் விளையாடாமலும் போக மாட்டார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் ஸ்னூபியை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இதற்கு தினமும் வெடிப்பொருள்களை கையாளும் விதம் குறித்து 40 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தினமும் மாலை 300 கிராம் மட்டன் மற்றும் பால் , சப்பாத்தி போன்றவை உணவாக வழங்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது 10 வருடங்களுக்கு பிறகு தனது சேவையினை முடித்துக்கொண்ட ஸ்னூபியைப் பிரிந்தது மிகவும் வருத்தமாக உள்ளது” என்கிறார்கள் அதிகாரிகள். 






”மோப்ப நாய்கள் ஒரு வயதாகும்போது அணியில் சேர்க்கப்படுகின்றன. நாய்களுக்கு நான்கு முதல் ஆறு மாதங்கள் வயதாகும்போது, அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் ஆறு மாதங்களுக்கு ராஞ்சியில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. வெடிபொருட்களை வாசனை மூலம் விரைவாக கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் விருப்பமான இந்த ஸ்னூபி  எங்களிடம் வந்தபோது, ​​ஒரு வயதுதான் அதற்கு” என அதிகாரி ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.