பெகசஸ் ஸ்பைவேர் விவகாரத்தில் இந்தியாவை மட்டுமே குறிவைப்பது ஏன் என்று அடுக்கடுக்கான சந்தேகங்களை முன்வைத்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.


இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத் தயாரிப்பு தான் பெகசஸ் ஸ்பேவர். இந்த உளவு மென்பொருளை அந்நிறுவனமானது தீவிரவாதிகள், சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இன்னும் பிற குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக உருவாக்கியது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் என்எஸ்ஓ நிறுவனத் தயாரிப்பான பெகசஸ் ஸ்பைவேரை வாங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவும் இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து இந்த ஸ்பைவேரை வாங்கிவைத்துள்ளது. தி வயர் ஆங்கில இணையதளத்தில் நேற்று முன் தினம் இரவு ஒரு செய்தி வெளியானது. அதில், 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 இந்தியர்களின் செல்போன்களை பெகாசஸ் ஸ்பைவே கொண்டு மத்திய அரசு ஒட்டுகேட்டதாகத் தெரிவித்தது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரின் பெயரும் பெகசஸ் ஸ்பைவே சர்ச்சையில் சிக்கியது. இதனால், நேற்று நாள் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளியால் முடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல்நாள் இந்த சர்ச்சை வெடித்ததால் பாஜக இது எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஊடகங்கள் செய்த சதி என்று கூறுகிறது.


எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் படேல் ஆகியோரின் செல்போன்களும் ஒட்டுகேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், டெல்லியில் நேற்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர ரவிசங்கர் பிரசாத் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.


அவர் கூறியதாவது:


என்எஸ்ஓவின் பெகசஸ் ஸ்பைவேரை உலகம் முழுவதும் 45 நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால், இந்தியாவை மட்டுமே குறிவைத்து சர்ச்சைகள் எழுப்பக் காரணம் என்ன? இஸ்ரேல் நிறுவனமே எங்களின் ஸ்பைவேரைப் பயன்படுத்துவோரில் பெரும்பாலோனர் மேற்கத்திய நாடுகளே என்று கூறியிருக்கிறது. இருப்பினும், இந்தியா மட்டும் குறிவைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இந்தக் கட்டுக்கதையை கட்டமைத்தவர்கள் யார்? 


மேலும், மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முதல் நாள் இந்தச் செய்தியை உடைக்க வேண்டும் என சில செய்தி நிறுவனங்கள் காத்திருந்து வெளியிட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வேண்டுமென்றே சிலரின் பெயரையும் கசியவிட்டுள்ளன. பெகசஸ் கதையில் மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எங்களுக்கு எதிரான ஆதாரம் எதையும் எதிர்க்கட்சிகள் காட்டமுடியாததே இதற்கு சான்று.


ஆம்னெஸ்டி இந்தியா போன்ற அமைப்புகள் இந்தியா விரோத கொள்கை கொண்டவை. பிரான்ஸின் ஃபோர்பிட்டன் ஸ்டோரிஸ் இணையத்தில் ஆம்னெஸ்டி இந்தியா வெளியிட்டுள்ள பட்டியல் ஆதாரமற்றவை. 2019ல் வாட்ஸ் அப் நிறுவனமும் இதேபோல் பெகசஸ் ஸ்பைவேரால் தங்களின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் கண்காணிக்கப்படுவதாகக் கூறியது. இவையெல்லாம் மத்திய அரசின் மாண்பை சிதைக்க களங்கள் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே தவிர வேறொன்றும் இல்லை.


இவ்வாறு அவர் கூறினார்.