இந்தியாவில் பெகசஸ் செயலி மூலம் ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகளை உளவுபார்ப்பதாக பிரச்சனைகள் எழுந்துவரும் நிலையில், மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்குதலில் ஈடுபடவில்லை, கண்காணிக்கும் மற்றும் உளவுப்பார்க்கும் விஷயத்தில் தான் முன்னேறி வருவதாக  காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்தியாவில் முன்னணி ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி, எதிர்கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர்களின் மொபைல் மற்றும் கணினி தகவல்களை  இஸ்ரேலைச்சேர்ந்த என் எஸ் ஏ நிறுவனத்தில் பெகசஸ் செயலி மூலம் மோடி அரசு வேவு பார்க்கப்பதாக வெளியான செய்திகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பினையும், சர்ச்சையினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் டெல்லியில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜேவாலா, மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் மக்களவைக் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், பெகசஸ் உளவுக்குப் பின்னால்  இருப்பது இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் காரணம் என்று குற்றம் சாட்டியும், உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதோடு பெகசஸ் செயலின் மூலம் உளவுபார்க்கும் செயல் என்பது, இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடியுள்ளதாகவும், இந்த உளவுபார்க்கும் செயல் நிச்சயம் வெட்கக்கேடானது என விமர்சனம் செய்துள்ளார்.



இதனையடுத்து பெகசஸ் செயலி மூலம் மத்திய அரசு வேவு பார்க்கும் செயல் குறித்து டெல்லியில் பேசிய காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர்  மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, ஊடகவியலாளர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட எதிர்க் கட்சித்தலைவர்களை வேவு பார்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் என குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இப்பிரச்சனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், முன்னதாக அமித்ஷா பதவி விலகவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.






மேலும், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிப்பதாக  கூறுகிறார். ஆனால் அதற்கு எதிர்மறையாகத்தான் உள்ளது. தற்பொழுது நடைபெறும் இதுபோன்ற செயல்களையெல்லாம் பார்க்கும்பொழுது டிஜிட்டல் இந்தியா அல்லது கண்காணிப்பு இந்தியா போன்றுதான் தெரிகிறது என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌத்ரி விமர்சனம் செய்துள்ளார். இதோடு மோடி அரசுக்கு எதிராக பேசும் மக்களுக்காகவே பெகசஸைப் பயன்படுத்தி அவர்களை உளவுபார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார்.



இப்பிரச்சனை தற்பொழுது இந்தியா முழுவதும் பல்வேறு அதிர்வலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் தனியுரிமைக்கருத்துக்களுக்கு ஆதாரமற்றதாக உள்ளது எனவும் இதனை மறுப்பதாக பாஜக அரசு கூறிவருகிறது.  மேலும் இப்பிரச்சனைக்குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் உளவு விவகாரம் சரியாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக வெளியானதால் எவ்வித பின்னணியும் இல்லை எனவும் ஊடகங்களில் தான் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆகையால் இதனை கூட்டத்தொடரொடு தொடர்புப்படுத்தி பார்க்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.


குறிப்பாக தி கார்டியன் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும்  இந்திய அரசாங்கம் உட்பட உலகின் பல அரசாங்கங்கள், பெகசஸ் என்ற சிறப்பு மென்பொருளின் மூலம் சிறந்த நபர்களை உளவு பார்க்கின்றன, இது இஸ்ரேலிய கண்காணிப்பு நிறுவனமான என்எஸ்ஓவால் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுக்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தக்குற்றச்சாட்டுகளை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.