இந்தியாவில் பொதுவாக திருமணங்கள் என்றால் மிகப் பெரிய மகிழ்ச்சி மற்றும் ஆரவாரம் ஆகியவை இருக்கும். அதற்கு ஏற்ப அனைத்து பகுதிகளிலும் திருமணங்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சராசரியாக திருமணங்களுக்கு பல லட்சங்கள் முதல் கோடிகள் வரை செலவு செய்யப்படுவது தற்போது வழக்கமாக ஆகிவிட்டது. இந்த ஆடம்பர திருமணங்களுக்கு நடுவே ஒரு சிலர் மிகவும் குறைவான செலவில் திருமணங்களை செய்து தான் வருகின்றனர். 


அந்த வகையில் தற்போது ஒரு தம்பதி வெறும் 500 ரூபாய் செலவில் தங்களது திருமணத்தை நடத்தியுள்ளது. யார் அவர்கள்? ஏன் இவ்வளவு எளிமையாக திருமணத்தை நடத்தியுள்ளனர்?


மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் பகுதியைச் சேர்ந்தவர் சிவாங்கி ஜோஷி. இவர் மத்திய பிரதேச அரசுப் பணியில் இருந்து வருகிறார். இவர் தர் நகரத்தின் சார் ஆட்சியராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அன்கித் சௌதரிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அன்கித் சௌதரி இந்திய ராணுவத்தில் மேஜராக பணி புரிந்து வருகிறார். அவர் லடாக் பகுதியில் பணி செய்து வந்ததால் முதலில் திருமணம் சற்று தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் கடந்த ஆண்டும் இந்த திருமணம் நடைபெறாமல் இருந்தது. 




இந்தச் சூழலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இவர்கள் இருவருக்கும் அப்பகுதியிலுள்ள ஒரு அரசு பதிவு அலுவலகத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு விதிகள் மத்திய பிரதேசத்தில் அமலில் உள்ளது. இதன் காரணமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுபாடுகளை முறையாக கடைபிடிக்கும் வகையில் சிவாங்கி ஜோஷி- அன்கித் தம்பதியினர் தங்களுடைய பெற்றோர்களுடன் மட்டும் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கான பதிவு மற்றும் சில இனிப்புகள் மற்றும் மாலை ஆகியவற்றிற்கு மட்டும் செலவு செய்தனர். 


மொத்தமாக இவர்களின் திருமணத்திற்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே செலவானது. பலர் திருமணங்களுக்கு ஆடம்பரமாக செலவு செய்வதற்கு நடுவில் இவர்கள் வெறும் 500 ரூபாயில் தங்களுடைய திருமணத்தை முடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமணத்தின் மூலம் கொரோனா காலத்தில் எப்படி விதிமுறைகள் உட்பட்டு திருமணம் நடத்த வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்த இவர்கள் நினைத்துள்ளனர். அதன்படி தங்கள் திருமணத்தை அவர்கள் இப்படி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 




அரசு ஊழியராக இருந்து கொண்டு பலருக்கு முன்மாதிரியாக திருமணம் செய்த இந்த தம்பதியை பலரும் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி ஆட்சியர் ஏகேசிங், “அன்கித் மற்றும் சிவாங்கி ஜோஷி ஆகிய இருவரும் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இருந்தாலும் மிகவும் குறைவான செலவில் தங்களுடைய திருமணத்தை நடத்தி பலருக்கும் முன்னுதாரணமாக இருந்துள்ளனர்”எனக் கூறி பாராட்டியுள்ளார். 


மேலும் படிக்க: காங்கிரசில் சேரும் பிரசாந்த் கிஷோர்.. பின்னணியில் ராகுல் பிரியங்கா