மத்திய பிரதேச கட்னியில் உள்ள கோயிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பக்தருக்கு மாரடைப்பு:


வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜேஷ் மெஹானி என்ற சாய் பாபா பக்தர், கோயிலில் சிலையை சுற்றி கொண்டிருந்தார். பின்னர், அவர் பிரார்த்தனை செய்ய அமர்ந்தார். ஆனால், அவரால் எழுந்திருக்க முடியவில்லை.


அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரால் எழுந்திருக்க முடியாமல் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். சுமார் 15 நிமிடங்களுக்கு அந்த நபர் எந்த பதிலும் அளிக்காததால் கோயிலில் உள்ள மற்ற பக்தர்கள் பூசாரியை அழைத்தனர். பின்னர், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.


மெஹானி ஒரு மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். மேலும் ஒவ்வொரு வியாழனும் அவர் கோயிலுக்கு செல்வதை பழக்கமாக கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.


 






இதேபோல, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் பேருந்தை ஓட்டி கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பிற வாகனங்களின் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.


உயிரிழப்பு:


மாரடைப்பு குறித்து சுகாதார நிபுணர்கள் கூறுகையில், "அமைதியாக ஏற்படும் மாரடைப்பு தீவிர மார்பு வலி, அழுத்தம், திடீர் மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்" என்றார்.


நன்றாக இருக்கும் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது என்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில், குஜராத்தில் தாண்டியா நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.


தாஹோட் மாவட்டம், தேவ்காத் பரியா பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஒருவர் விழாவில் தன் உறவினர்களுடன் சேர்ந்து தாண்டியா நடனம் ஆடத் தொடங்கியுள்ளார். தாண்டியா ஆடிக்கொண்டிருக்கும்போதே திடீரென  உடல் தளர்ந்து மயங்கி சுருண்டு விழுந்த அந்நபர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.


இதேபோல் முன்னதாக இந்தி காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா உடற்பயிற்சி செய்யும்போது சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.