உலக பொருளாதாரம், சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி போன்ற விவகாரங்களை எதிர்கொள்வதற்காக ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது.


இந்தோனேசியாவிடம் இருந்த அதன் தலைவர் பதவியை இந்தியா டிசம்பர் 1ஆம் தேதி ஏற்று கொண்டது. அதன் தொடர்ச்சியாக, அடுத்தாண்டு ஜி - 20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. 


இந்நிலையில், அமைதியையும் நிலையான உலகையும் கட்டமைப்பதற்காக நண்பர் மோடி அனைவரையும் ஒருங்கிணைப்பார் என நம்புவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் நேற்று பகிர்ந்த மேக்ரான், ஜி 20 அமைப்பில் இந்தியாவின் பங்கு குறித்து மேற்கோள் காட்டினார்.


"ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம். ஜி20 அமைப்பின் தலைவர் பதவியை இந்தியா ஏற்று கொண்டுள்ளது! என் நண்பர் நரேந்திர மோடி அமைதி மற்றும் நிலையான உலகத்தை உருவாக்குவதற்காக எங்களை ஒன்றிணைப்பார் என்று நம்புகிறேன்" என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


 






முன்னதாக, தலைவர் பதவியை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார். அதில், "அமெரிக்காவின் வலுவான கூட்டாளியாக இந்தியா உள்ளது. மேலும், ஜி20 தலைவர் பதவியை இந்தியா வகிக்கும் காலத்தில் எனது நண்பர் பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்க நான் எதிர்நோக்குகிறேன். 


காலநிலை, ஆற்றல் மற்றும் உணவு நெருக்கடிகள் போன்ற அனைவருக்குமான சவால்களைச் சமாளிக்கும் அதே வேளையில் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நாம் ஒன்றாகச் சேர்ப்போம்" என பைடன் தெரிவித்திருந்தார்.


ஜி - 20 தலைவர் பதவியை ஏற்றிருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, "இந்தியாவின் ஜி-20 நிகழ்ச்சி நிரல் உள்ளடக்கமான, லட்சியமான, செயல் சார்ந்த மற்றும் தீர்க்கமானதாக இருக்கும். 


இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒன்றாகச் செயல்படுவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும். இந்தியாவின் ஜி - 20 தலைமையை நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான தலைமையிடமாக மாற்ற நாம் ஒன்றிணைவோம்" என கூறினார்.


வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து குறிப்பிடுகையில், "சவாலான சூழ்நிலையில் ஜி 20 தலைவர் பதவியை இந்தியா ஏற்கிறது. உலகளாவிய பிரச்னைகளுக்கு கூட்டு தீர்வுகளை காண்பதற்கு பெரிய நாடுகளுக்கு அழத்தம் தரப்படும்" என்றார்.