கடந்த 2019ஆம் ஆண்டு, சட்டமன்ற தேர்தலின்போது, முதலமைச்சர் பதவி தொடர்பான சண்டையில் தனது முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் பறி கொடுக்க வேண்டியிருந்தது. கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாக துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்-க்கு மீண்டும் முதலமைச்சாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, 33 தொகுதிகளில் வெற்றியும் மேலும் 99 தொகுதிகளிலும் முன்னிலையிலும் உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 15 தொகுதிகளில் வெற்றியும் மேலும் 40 தொகுதிகளில் முன்னிலையிலும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றியும் 23 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளது.
ஜெயலலிதா பாணியில் எடுத்த சபதம்:
இதன் மூலம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. பாஜக கூட்டணிக்கு கடும் போட்டி அளிக்கும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் மட்டும் இன்றி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சிகளும் தேர்தலில் மண்ணை கவ்வியுள்ளது.
பாஜக கூட்டணியின் இந்த இமாலய வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் என கூறப்படுகிறது. இவர் வேறு யாரும் அல்ல. தற்போது, துணை முதலமைச்சராக உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தவர்.
ஆனால், 2019ஆம் ஆண்டு, சட்டமன்ற தேர்தலின்போது, முதலமைச்சர் பதவி தொடர்பான சண்டையில் தனது முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் பறி கொடுக்க வேண்டியிருந்தது. கூட்டணி கட்சிகளின் அழுத்தம், தேசிய தலைமையின் உத்தரவின் காரணமாக துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்-க்கு மீண்டும் முதலமைச்சாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 1989ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் தேதி நடந்த மோதலின்போது, அவையில் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் முதலமைச்சராகத்தான் மீண்டும் இந்த அவைக்குள் நுழைவேன் என்று கூறிவிட்டு சென்ற ஜெயலலிதா, இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சராக தனது சபதத்தை நிறைவேற்றினார்.
அதேபோல், கடந்த 2019ஆம் ஆண்டு, முதலமைச்சர் பதவியை இழந்த ஃபட்னாவிஸ், ஜெயலலிதா பாணியில் 5 ஆண்டுகளில் தனது கட்சியை வெற்றி பெற செய்திருக்கிறார். அவருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்குமா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
யார் இந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்?
கடந்த 1970ஆம் ஆண்டு, ஜூலை 22ஆம் தேதி பிறந்த தேவேந்திர கங்காதர் ஃபட்னாவிஸ், மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். 44ஆவது வயதில், சரத் பவாருக்குப் பிறகு மாநிலத்தின் இளைய முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார்.
தனது கல்வி படிப்பை நாக்பூரில் உள்ள சங்கர் நகர் சௌக்கில் உள்ள சரஸ்வதி வித்யாலயாவில் முடித்தார். ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டக் கல்வியைத் தொடர நாக்பூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1992 ஆம் ஆண்டு, பட்டம் பெற்ற இவர், பெர்லினில் உள்ள டி.எஸ்.இ.யில் முதுகலை வணிக மேலாண்மை பட்டமும் திட்ட மேலாண்மை டிப்ளோமாவும் பெற்றார்.
2006ஆம் ஆண்டு, ஃபட்னாவிஸ் அம்ருதா ரானடேவை திருமணம் செய்து கொண்டார். இவர் நாக்பூரில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் இணை துணைத் தலைவராகப் பணிபுரிகிறார். இந்த தம்பதியருக்கு ஐந்து வயதில் திவிஜா ஃபட்னாவிஸ் என்ற பெண் குழந்தை உள்ளது.