மேற்கு ஆப்பிரிக்கா நாடான சியரா லியோனில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த லைபீரிய நாட்டுப் பயணியிடம் இருந்து 3496 கிராம் எடையுடைய கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
டிராலி பையின் மறைத்து வைக்கப்பட்ட கோகோயின்:
இந்த நிலையில், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) அதிகாரிகள், சியரா லியோனில் இருந்து வந்த லைபீரிய நாட்டுப் பயணியைச் சோதனையிட்டனர்.
பயணியின் உடைமைகளை ஆய்வு செய்தபோது, அது வழக்கத்திற்கு மாறாக இருந்ததாக டிஆர்ஐ அதிகாரிகள் சந்தேகித்தனர். முழுமையான சோதனையில், டிராலி பையின் அடிப்பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற தூள் அடங்கிய இரண்டு பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
சோதனையில் அந்தப் பொருள் கோகோயின் என உறுதிப்படுத்தப்பட்டது. மொத்தம் 3496 கிராம் எடையுடைய அந்தப் பொருளின் சந்தை மதிப்பு தோராயமாக ரூ. 34.96 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அந்த பயணி கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
மும்பை விமான நிலையத்தில் தொடரும் கடத்தல்:
இதற்கு முன்பு, மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.
சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தில் குஜராத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) இணைந்து நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தது. நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது.
இதையும் படிக்க: Karthigai Deepam: மறைந்து கொண்ட கார்த்தி! கொலை செய்ய சதித்தீட்டம் தீட்டிய சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று