ஷாப்பிங் போக யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் குழந்தைகளுக்கு தங்களின் பெற்றோர், வீட்டில் உள்ள பெரியோர் போல் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து பார்க்கப் பிடிக்கும். அப்படித்தான் ஒரு குழந்தை தன் தாயைப் போல் ஷாப்பிங்குக்குப் புறப்பட தாயும் வழிகாட்டுகிறார். இந்த க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.


இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் அதிகபட்சமாக 3லிருந்து 4 வயதுக்குள்ளே உள்ள குழந்தை ஒன்று தோளில் பையுடன் இருப்பதைக் காணலாம். அது ஷாப்பிங்குக்கான சணல் பை. கூடவே கையில் ஒரு லிஸ்ட் இருக்கிறது. ஒரு நூறு ரூபாய் தாளும் உள்ளது. அந்தக் குழந்தை கையில் உள்ள லிஸ்ட்டையே உற்று கவனித்துக் கொண்டிருக்க தாயார் குழந்தையிடன் நினைவுபடுத்துகிறார். குழந்தையிடம் அந்தத் தாய், ஷாப்பிங் போகத் தயாரா? என்னென்ன வாங்க வேண்டும்? எனக் கேட்க. குழந்தை மழலை மொழியில் டொமேட்டோ, கேஸ்ஸிகம், மஷ்ஷூம், ப்ராக்லி என்று அழகாகக் கூறுகிறது. அவ்வப்போது கையில் உள்ள அந்த லிஸ்ட்டையும் பார்த்துக் கொள்கிறது. அப்புறம் அந்தத் தாய் உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது எனக் கேட்க நூறு ரூபாய் என்பதையும் ஆங்கிலத்தில் சொல்கிறது. உடன் செல்லும் பணிப்பெண்ணிடம் எவ்வளவு உள்ளது எனக் கேட்க அவரிடமும் 100 உள்ளது எனக் கூறுகிறது. பின்னர் அந்தத் தாய் முத்தத்துடன் வழியனுப்ப, குழந்தை ஆர்வத்துடன் கதவைத் திறந்து  செல்கிறது.




இந்த வீடியோ பார்த்து ரசிப்பதற்கு மட்டுமல்ல. சிறு குழந்தைகளை வீட்டின் சிறிய வேலைகளில் இவ்வாறு ஈடுபடுத்துவதும் குழந்தை வளர்ப்பின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்வதற்கும் கூட.


குழந்தைகளை வளர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. அதுவும் இந்த கோவிட் பரவல் காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் வீட்டினுள் முடங்கும் சூழல் உள்ளதால் அவர்களை உளவியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு உள்ளது. பள்ளி இருந்தால் ஆசிரியர், நட்பு என இயல்பாக குழந்தைகள் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், இப்போது பள்ளிகள் இல்லாத சூழலில் இந்தப் பொறுப்பு பெற்றோருக்கு அதிகமாக இருக்கிறது. சோஷியல் லைஃப் எனப்படும் சமூக வாழ்க்கை முறையை இந்தத் தாய் கொடுத்த சிறு பயிற்சியைப் போன்ற பயிற்சிகள் மூலம் செய்யலாம்.


இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பொறுப்புணர்வு வரும். தன் மீது தாய் வைத்த நம்பிக்கை, குழந்தையின் தன்னம்பிக்கையையும் வளர்க்கும். குழந்தையின் நினைவாற்றலுக்கும் இது சிறு பயிற்சி தான். அது மட்டுமல்லாமல் பணத்தைக் கையாளவும் குழந்தை இயல்பாகத் தெரிந்து கொள்ளும். இந்தத் தாய் எதையுமே திணிக்காமல் வெகு இயல்பாக குழந்தைக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.