Delhi to Varanasi: டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தத அடுத்து, அதில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்:
டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து சோதனைக்காக விமானம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. விமான பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு குழு அங்கு விரைந்து சோதனை மேற்கொண்டுள்ளது. அதிகாலை 5.35 மணிக்கு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
அவசர வழியில் வெளியான பயணிகள்:
விமானம் தனிமைப்படுத்தப்பட்ட உடன், அவசர வழி வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதுதொடர்பான வீடியோவில், அவசர வழிகள் வழியாக பயணிகள் விமானத்தில் இருந்து வெள்யேறி, இருக்கைகள் மீது நடந்து சென்று, சறுக்குமரம் போன்று அமைக்கப்பட்டு இருந்த சாய்தளம் வழியாக பொதுமக்கள் வெளியேறிய” காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
விமான நிறுவன அறிக்கை:
இதுதொடர்பாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E2211 டெல்லி விமான நிலையத்தில் இருந்தபோது வெடிகுண்டு மிரட்டலைப் பெற்றுள்ளது. தேவையான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு, விமான நிலைய பாதுகாப்பு நிறுவனங்களின் வழிகாட்டுதல்களின்படி விமானம் தொலைதூரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. அனைத்து பயணிகளும் அவசர கால வழிகள் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானம் தற்போது சோதனைக்கு உட்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்த பிறகு, விமானம் மீண்டும் முனையப் பகுதியில் நிலைநிறுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வரும் புரளி:
திங்கள்கிழமை மும்பை தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலுக்கும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஆனால் இரண்டு இடங்களிலும் தீவிர சோதனை நடத்தியும் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த வாரம், லேடி ஸ்ரீ ராம் கல்லூரி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் சில கல்லூரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. சோதனையில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்காததால் அது ஒரு புரளி என உறுதியானது.
மே 23 அன்று பெங்களூரில் உள்ள மூன்று சொகுசு ஓட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதற்கு ஒரு நாள் முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் இதேபோன்ற மின்னஞ்சல் வந்தது. இந்த மின்னஞ்சல்களும் புரளி என நிராகரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள 100 பள்ளிகளுக்கும், நொய்டாவில் இரண்டு பள்ளிகளுக்கும், லக்னோவில் உள்ள ஒரு பள்ளிக்கும் மே 1-ம் தேதி மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதுவும் போலியானது என நிராகரிக்கப்பட்டது