ராஜஸ்தானில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் அரசியலை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி, தேர்தலில் வென்றதாக சரித்திரமே இல்லை. ஆனால், அதை இந்த முறை மாற்றி அமைக்க காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 


ராஜஸ்தானில் நிலவும் உச்சக்கட்ட அதிகார போட்டி:


ஆனால், ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே நிலவும் அதிகார போட்டி நிலவி வருகிறது.


இதை தீர்க்க காங்கிரஸ் மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரவிருக்கும் தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்தும் ராஜஸ்தானில் நிலவும் உட்கட்சி பூசலை தீர்த்து வைக்கும் நோக்கிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.


டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தவா, மாநில பிரிவு தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, சச்சின் பைலட் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அசோக் கெலாட், வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டார்.


சத்தீஸ்கர் ஃபார்முலாவை கையில் எடுத்த கார்கே:


அப்போது, கட்சியில் மதிப்பு மிக்க பதவி தனக்கு தரப்பட வேண்டும் என சச்சின் பைலட், மூத்த தலைவர்களை கேட்டு கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள மறுக்கும் அசோக் கெலாட், தனது தலைமையிலேயே கட்சி வழிநடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதேபோல, சமூக நல திட்டங்களை மையபடுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது.


இந்த சூழலில், சத்தீஸ்கர் பார்முலாவை கையில் எடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானை போன்றுதான், சத்தீஸ்கரிலும் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கும் மூத்த அமைச்சர் சிங் டியோவுக்கும் பிரச்னை நிலவி வந்தது. இந்தாண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிங் டியோவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார் காங்கிரஸ் தலைவர் கார்கே.


இதேபோன்று, சச்சின் பைலட்டுக்கும் துணை முதலமைச்சர் பதவி வழங்க கார்கே திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து, நம்பிக்கயுடன் பேசிய கார்கே, "கட்சி ஒற்றுமையாக மக்கள் மத்தியில் செல்லும்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.