பல சவால்களை சந்தித்து, தடைகளை எதிர்கொண்டால்தான் எதிலும் வெற்றி கிடைக்கும். உயர் நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பிடித்த கல்லூரியில் சேர்வதுதான் கனவே. தனக்கு பிடித்த கல்லூரியில் இடம் கிடைக்குமா? என எண்ணும் மாணவர்கள், பல இரவுகள் தூக்கம் இன்றி கழிக்கின்றனர்.


170 கல்லூரிகளில் அட்மிஷன்:


நிலைமை இப்படியிருக்க, இம்மாதிரியாக எந்த கவலையும் இன்றி காணப்படுகிறார் டென்னிஸ் மாலிக் பார்ன்ஸ். அமெரிக்கா லூசியானாவில் நியூ ஆர்லியன்ஸ் சர்வதேச உயர்நிலைப் பள்ளியில் இறுதி ஆண்டு படித்து வரும் இவருக்கு 170 கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்துள்ளது. கூடுதலாக, 9 மில்லியன் டாலர்களை உதவித்தொகையாக பெற்றுள்ளார். 


தனக்கு எப்படி இத்தனை கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்தது என்பதை சிஎன்என் செய்திக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்துள்ளார் பார்ன்ஸ். பார்ன்ஸின் திட்டம், என்னவென்றால், தன்னால் முடிந்தவரை அதிக கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடந்த 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளார் பார்ன்ஸ்.


பார்ன்ஸ் விண்ணிப்பிக்க தொடங்கியபோது, தனக்கு அட்மிஷன் கிடைக்குமா? இல்லையா? என்றெல்லாம் கவலைப்படவில்லை. சுமார் 200 கல்லூரி நிறுவனங்களுக்கு அவர் விண்ணப்பித்தார்.


74 கோடி ரூபாய்க்கு கல்வி உதவித்தொகை:


"10 மில்லியன் உதவி தொகை பெற வேண்டும். இதுவே எனது இலக்கு. நான் அதிகமான கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணிப்பிக்க, எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது.


அதேபோல, கல்வி உதவி தொகையும் எனது அட்மிஷனை ஏற்று கொண்ட கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே சென்றது. எனது ஆர்வம் அதிகரித்து கொண்டே சென்றது. ஆனால், அதிகபடியான கல்லூரிகள் ஏற்று கொண்ட பிறகு, அது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை


நீங்கள் உங்கள் பள்ளி, உங்கள் கல்வியை முதன்மையாக வைத்து, கடவுளை நம்பினால், நீங்கள் என்ன செய்தாலும் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்" என்றார்.


அடுத்து என்ன படிக்க போகிறேன் என்பது குறித்து பேசிய அவர், "கணினி அறிவியல் மற்றும் குற்றவியல் நீதித்துறையில் இரட்டைப் பட்டம் பெற திட்டமிட்டுள்ளேன். மேலும் எந்தக் கல்லூரியில் சேர திட்டமிட்டுள்ளேன் என்பதை அடுத்த மாதம் அறிவிப்பேன்" என்றார்.


அதிக கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்திருக்கும் பார்ன்ஸ், கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. எனவே, கின்னஸை நாடியுள்ளது பார்ன்ஸின் பள்ளி நிர்வாகம். 4.98 ஜிபிஏ உடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பள்ளி படிப்பில் தேர்வடைந்துள்ளார் பார்ன்ஸ். 


இதுகுறித்து பார்ன்ஸின் பள்ளி நிர்வாகி பேசுகையில், "பள்ளி நிர்வாகம் பார்ன்ஸின் சாதனையைப் பற்றி பெருமிதம் கொள்கிறது. கின்னஸ் புத்தகத்தை தொடர்பு கொண்டு சாதனையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முயற்சி செய்து வருகிறோம்" என்றார்.