இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணிக்கு முதல் உலகக்கோப்பையை வென்று தந்தவருமான கபில்தேவ் தனது இன்ஸ்டாகிராமின் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றில் “ இவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக பாலியல் புகார்:
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, இந்த சம்பவம் குறித்து விசாரணையை மேற்பார்வை செய்ய மத்திய அரசு ஒரு குழு அமைத்தது.
பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு மாதத்திற்கு இந்த குழு விசாரிக்கும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த குழு, தனது அறிக்கையை கடந்த 5-ஆம் தேதி, விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்பித்தது.
ஆனால், ஆறு பேர் கொண்ட குழுவின் முடிவுகளை அமைச்சகம் இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை. இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ரவி தஹியா, தீபக் புனியா ஆகியோர் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் புகார் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
கபில்தேவ் ஆதரவு
இந்த போராட்டதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணிக்கு முதல் உலகக்கோப்பையை வென்று தந்தவருமான கபில்தேவ் தனது இன்ஸ்டாகிராம்ன் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றில் “ இவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த போராட்டத்துக்கு முதல் முதலாக ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் இவர்தான். அதேபோல், இவருக்குப் பின்னரும் கூட வேறு எந்த கிரிக்கெட் வீரரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்த வீராங்கனைகளின் அற போராட்டத்திற்கு முதல் வெற்றி:
இதற்கிடையே, பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்றைய விசாரணையின்போது, இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் பேசுகையில், "சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இவை அனைத்தும் கடுமையான குற்றச்சாட்டுகள். இந்த விஷயத்தை இந்த நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்" என்றார்.
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரிஜ் பூஷன் சிங், தான் நிரபராதி என்பதை நிரூபிக்க கடுமையாக போராடுவேன் என்று தெரிவித்துள்ளார். உதவியற்றதாக உணரும் அந்த நாளில் மரணத்தைத் தழுவ விரும்புகிறேன் என்றும் உணர்ச்சி பொங்க வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார்.
"எங்கள் மனதில் குரலை கேட்க முடியாதா?"
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள், பாஜக எம்பியாக உள்ள பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரம் கேட்டுள்ளனர். "பிஎம் மோடி சார் 'பேட்டி பச்சாவ்' மற்றும் 'பேட்டி படாவோ' பற்றி பேசுகிறார். மேலும் அனைவரின் 'மன் கி பாத்'யும் கேட்கிறார். அவரால் எங்கள் 'மன் கி பாத்' கேட்க முடியாதா?" என ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் சமீபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.