கடந்தாண்டு செப்டம்பர் மாதம், கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியில் உள்ள ஒரு பழக்கடையில் மாம்பழங்களை திருடி காவல்துறைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதற்காக ஏஆர் கேம்ப் சிவில் போலீஸ் அதிகாரி பி.வி. ஷிஹாப்பை கேரள போலீசார் பணி நீக்கம் செய்தனர். புகார்தாரர் வழக்கை வாபஸ் பெற்ற பிறகும் இடுக்கி மாவட்ட காவல்துறை தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


கையும் களவுமாக சிக்கிய காவல்துறை அதிகாரி:


ஒரு மாத காலம் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஷிஹாப் நேற்று முன்தினம் பணிநீக்கம் செய்யப்பட்டார். காவல்துறையினரின் செயல் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகக் கூறி இடுக்கி மாவட்ட காவல்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளி பகுதியில் ஏ.ஆர். கேம்ப் காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரியான பி.வி. ஷிஹாப், கடந்தாண்டு, பழக்கடை ஒன்றில் மாங்காய் திருடிய சம்பவம் காவல்துறை அதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. பழக்கடைக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் இந்த சம்பவம் பதிவானது.


சிசிடிவி வீடியோவில், ஒரு கிலோ 500 ரூபாய்க்கு மேல் விலையுள்ள மாம்பழப் பெட்டிகளை போலீஸ்காரர் எடுத்துச் சென்று தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வைத்து எடுத்து சென்றது காண முடிந்தது.


கடை உரிமையாளர் கடையை விட்டு வெளியே வந்து பார்த்தபோது மாம்பழங்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அவர், அந்த பழத்தை போலீஸ்காரர் ஒருவர் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். 


காவல்துறைக்கு சங்கடம்:


புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதையறிந்த காவல்துறை அதிகாரி ஷிஹாப், தப்பித்து ஓடினார். உடனடியாக, அவர் மீது உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீபத்தில் இடுக்கி போலீஸ் சூப்பிரண்டு அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


இதையடுத்து, பல்வேறு காவல்துறை அதிகாரிகள், பல்வேறு விதமான குற்றங்களில் ஈடுபடுவதாக வெளியான செய்தி கேரள காவல்துறையின் இமேஜை சுக்கு நூறாக உடைத்தது. இது, ஷிஹாப்பின் நிலையை மேலும் மோசமாக்கியது.


இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்த கேரள காவல்துறை, "தவறு செய்தவர்கள் தண்டனை இல்லாமல் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பின்னர், ஷிஹாப், பணியில் இருந்து நீக்கப்பட்டார்" என தெரிவித்தது.


மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே, இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மாங்காயை திருடிய காவல்துறை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார்.