பெங்களூரு ஹோசகோட்டில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் 14 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, விடுதி வார்டன் தனது தாயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க மொபைல் போன் வழங்கவில்லை என்பதால் சிறுவன் தூக்குபோட்டுக் கொண்டதாக கடந்த ஞாயிறு அன்று போலீசார் தெரிவித்தனர்.


சிறுவனின் தாயார் ஜூன் 11ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாள் அன்று அவரை அழைத்து வாழ்த்து தெரிவிக்க சிறுவன் வார்டனிடம் மொபைல் ஃபோனைக் கோரியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் வார்டன் போனை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சிறுவனின் குடும்பத்தினர் பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயன்றபோதும், பேச அனுமதிக்காததால் அவரால் பேச முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.




இதனால் மனவேதனை அடைந்த சிறுவன், சனிக்கிழமை நள்ளிரவுக்கு முன்பு தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.


ஞாயிற்றுக்கிழமை காலை விடுதியில் இருந்த மற்ற மாணவர்கள் சிறுவன் இறந்து கிடப்பதைக் கண்டு விடுதி நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்தனர். சிறுவனின் பெற்றோர்கள் பின்னர் விடுதிக்கு வந்தடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.


இதைத் தொடர்ந்து தற்போது போலீசார் இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


முன்னதாக, வேறொரு சம்பவத்தில் ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த, லோக்கல் காங்கிரஸ் பிரமுகர் சாந்திராஜ். இவரது மகன் 16 வயதே ஆன சிறுவன். இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் பப்ஜி விளையாட்டினை விளையாடியுள்ளார். இதில் போட்டி போட்டு  விளையாடியதில் சாந்திராஜின் மகன் தோற்றுள்ளார். போட்டியில் தோற்றதால் மனமுடைந்துள்ளார். மனமுடைந்த நிலையில் இருந்த அந்த சிறுவனை அவரது நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதனால் மேலும் மனமுடைந்த அச்சிறுவன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அச்சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியில் சென்றிருந்த அச்சிறுவனின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்த போது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சிறுவனது பெற்றோர்கள் மேலும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், தங்களது மகனின் சாவுக்கான காரணத்தினை கண்டுபிடிக்குமாறு புகார் அளித்துள்ளனர்.


இந்த தற்கொலை வழக்கினை விசாரித்த காவலர்கள், அச்சிறுவன் பப்ஜி விளையாட்டில் தோற்றதன் மூலம் நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் சிறுவனின் உடலை மீட்ட காவலர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுவனின் தற்கொலைக்கு வேறு எதாவது காரணம் இருக்குமா எனவும் விசாரித்து வருகின்றனர். பப்ஜி விளையாட்டில் தோற்றதற்காக தனது உயிரினை மாய்த்துக் கொண்ட சிறுவனின் இறப்பு அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தினையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் பெற்றோர்கள் பப்ஜி விளையாட்டினை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


சிறுவர்களின் தொடர் தற்கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050