உடலுறவை மறுப்பதே, திருமண உறவை முடித்துக்கொள்வதற்கான உச்சபட்ச காரணமாக இருக்கமுடியாது என டெல்லி நீதிமன்றம் ஒரு வழக்கு விசாரணையின்போது தெரிவித்துள்ளது


தம்பதிகள் திருமணமான ஒரு வருடத்தில் பரஸ்பர விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் (நேற்று) திங்கள்கிழமை மறுத்துவிட்டது.


இரு தரப்பினரும் திருமண உறவில் ஈடுபடுவதை மறுப்பதன் அடிப்படையில் விவாகரத்து கோரி மனுதாரர்கள் குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பெண் அந்த மனுவில் கொடுத்த தகவலில், எனக்கும், என்னை திருமணம் செய்துகொண்ட கணவருக்கும் கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் 4 ம் தேதி அன்று முறைப்படி உத்தரகண்ட் மாநிலம் ராம் நகரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சில நாட்களிலேயே எனக்கும், என் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 


இதன் காரணமாக, கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி முதல் ஒரு வீட்டுக்குள் இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினோம். அதன் பிறகு, தொடர்ந்து இதே நிலைமை எங்கள் இருவருக்குள் நீடிக்க, கடந்த ஜூன் 29, 2021 அன்று எனது கணவர் வீட்டில் இருந்து வெளியேறி வந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் அக்டோபர் 16, 2021 அன்று தள்ளுபடி செய்தது. அதில், தம்பதியினரின் விவாகரத்து மனு ஒரு வருடத்திற்கு முன் தாக்கல் செய்யப்பட்டதாலும், இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 14, விவாகரத்துக்குத் தாக்கல் செய்வதற்கு முன், திருமணமான நாளிலிருந்து கட்டாயமாக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்து தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மனுதாரர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 


விவாகரத்து மனுவானது நேற்று தலைமை நீதிபதி விபின் சங்கி, நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணை வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலப்பகுதியில் தாம்பத்திய உறவை மறுப்பது  முற்றிலும் கொடுமைக்கு சமம் என்று நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி, உடலுறவை மறுப்பதே, திருமண உறவை முடிப்பதற்கான உச்சபட்ச காரணமல்ல என்று தெரிவித்து என்று மேல்முறையீடு செய்த மனுதாரர்களின் மனு நிராகரிக்கிறோம் என்று தெரிவித்தனர். 


மேலும், "இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, 13 பி மற்றும் பிரிவு 14 ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு தனிநபர் வாழ்க்கை மற்றும் திருமண பந்தத்தை பாதுகாக்கும் செயலாகும். இதன் அடிப்படையில் உடலுறவை மறுப்பதே, திருமண உறவை முடிப்பதற்கான உச்சபட்ச காரணமல்ல என வகைப்படுத்த முடியாது. இதனால் வரையறுக்கப்பட்ட  நடைமுறையை கடந்து செல்ல முடியாது என தெரிவித்து குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண