கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில், டெல்லியின் பல பகுதிகளில் மக்கள் தொடர்ந்து கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர். டேங்கர்களில் இருந்து தண்ணீரை எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை: மயூர் விஹாரில் உள்ள சில்லா காவுன், ஓக்லாவில் உள்ள சஞ்சய் காலனி மற்றும் கீதா காலனி போன்ற பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், டெல்லியில் நிகழும் அடுத்தடுத்த பிரச்னைகள் மக்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது.
ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், டெல்லியில் நிலவும் தண்ணீர் பஞ்சம் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லியின் தண்ணீர் தேவையை பெரும்பாலும் அண்டை மாநிலங்களே பூர்த்தி செய்து வருவதாகவும் ஆனால், சமீப நாள்களாக தண்ணீர தர ஹரியானா அரசு மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தண்ணீர் கோரி இரண்டாவது நாளாக டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இது எனது உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாள். டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய அமைச்சர்: டெல்லிக்கு அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் வருகிறது. டெல்லியில் உள்ள வீடுகளுக்கு ஒரு நாளைக்கு 1005 மில்லியன் கேலன் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 613 மில்லியன் கேலன் தண்ணீர் ஹரியானாவில் இருந்து வருகிறது.
ஆனால், கடந்த பல வாரங்களாக ஒரு நாளைக்கு 513 மில்லியன் கேலன் தண்ணீர் தான் வெளியாகிறது. இதனால் டெல்லியில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் முயற்சித்தேன்.
ஆனால், ஹரியானா அரசு இப்போது தண்ணீர் வழங்க அரசு சம்மதிக்காததால், வேறு வழியின்றி உண்ணாவிரதம் இருக்கிறேன். இன்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹரியானாவில் இருந்து நேற்று ஒரு நாளைக்கு 110 மில்லியன் கேலன் குறைந்த அளவு தண்ணீரே வழங்கியது.
ஹரியானா அரசு டெல்லிக்கு தண்ணீர் வழங்கும் வரை, டெல்லியின் 28 லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வரை எனது உண்ணாவிரதத்தை தொடருவேன்" என்றார்.