டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து  மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினர் எதிர்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,டெல்லி பலகலைக்கழகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும், தனி மனிதர், ஒரு சமூக அமைப்பின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இருக்கக்கூடாது என்றும் விளக்கமளித்தது. 


முன்னதாக, கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவில், " டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகா ஸ்வேதாதேவி பாமா,சுகிர்தராணி  ஆகிய காத்திரமான தலித்திய,பெண்ணிய படைப்பாளிகளின்  படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள்,பட்டியலின மக்களுக்கு எதிரான பிஜேபி/ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கையே இது.  கூடுதலாக பாமாவும்,சுகிர்தராணியும் பிஜேபி/ ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை உறுதியோடு எதிர்க்கிற தமிழ்மண்ணின் படைப்பாளிகள்.மோடி அரசின் இந்த பாசிச செயல்பாடு கடுமையான கண்டனத்திற்குரியது. உடனடியாக நீக்கப்பட்ட படைப்புகள் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்" என்று பதிவிட்டார்.  


டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " மேற்பார்வை குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தான் பி.ஏ ஹானர்ஸ் (ஆங்கிலம்) ஐந்தாவது செமஸ்டருக்கான பாடத்திட்டத்தை டெல்லி பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பாக ஊடகங்களில்  வெளியான செய்திகள்    தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம். பாடத்திட்டம் தொடர்பாக அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனைகளை பெற்றும், பொறுத்தமான அனைத்து தளங்களிலும்  கலந்துரையாடல் நடத்தியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  


பாடத்திட்டத்தின் இறுதி உள்ளடக்கத்தை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை வடிவமைத்தது.  பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவால் அமைக்கப்பட்ட அதிகாரம் பெற்ற மேற்பார்வைக் குழு, கலந்தாலோசித்தும், ஆங்கிலத் துறையின் தலைவர்  பரிந்துரைகளை ஏற்றும், பாடத்திட்டத்தை இறுதி செய்தது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.du.ac.in என்ற இனைய தளத்தில்  ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.




பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதி,  இனம்,மதம் ஆகியவற்றைத் தாண்டி தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற பல்வேறு அறிஞர்களின் படைப்புகள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. கல்வியில் சிறந்து விளங்க, சாதி மதி வேறுபாடுகளுக்கு அடிபணியத் தேவையில்லை என்று பல்கலைக்கழகம் நம்புகிறது.  


ஒரு மொழிப் பாடத்திட்டத்தில் இடம்பெறும் இலக்கிய படைப்புகள்  எந்தவொரு தனிநபரின் உணர்வுகளை புண்படுத்தாத வகையிலும்,  முற்காலத்திலும், தற்காலத்திலும் சமூகத்தின் உண்மை தன்மைகளை வெளிப்படுத்தும் பேதமற்ற இலக்கியப் படைப்புகள் தேவை என்பதை பல்கலைக்கழகம் உணர்கிறது. எழுத்திலும் கருத்திலும் பாடத்திட்டங்களை உள்வாங்கும் இளம் தலைமுறையினருக்கு  இத்தகைய உள்ளடக்கிய அணுகுமுறை முக்கியமானது. எனவே, பன்முகத்தன்மை, நல்லிணக்கம், சகோதரத்துவ உணர்வை வெளிபடுத்தும் விதமாக பாடத்திட்டங்கள் உள்ளன". இவ்வாறு, டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.