உத்தரப் பிரதேச மாநிலத்தில் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி 80 வயது சாமியார் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சுபாஷ் என்ற அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் எடாவா மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. எட்டாவா மாவட்ட பகேவார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கண்ணீர்மல்க விவரித்த பாட்டி:
இச்சம்பவம் குறித்து கண்ணீர்மல்க விவரித்த சிறுமியின் பாட்டி, "எனது பேத்திக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தோம். அக்கம்பக்கத்தினர் சொன்னதால் சுபாஷ் என்ற சாமியாரிடம் கூட்டிச் சென்றோம். சுபாஷ், சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி உள்ளே கூட்டிச் சென்றார். அங்கே அவர் எனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். ஆனால், எனது பேத்தி சுதாரித்துக் கொண்டு குரல் எழுப்பினார். இதனால், நாங்கள் பேத்தியை காப்பாற்றிவிட்டோம். இருந்தாலும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம் " என்றார்.
பகேவார் காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். சுபாஷை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சிறுமியின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
உ.பி.யில் தான் அதிகம்:
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை 2018, 19 காலகட்டத்தில் 7.3% அதிகரித்துள்ளது. நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது. அதுவும் குறிப்பாக பட்டியிலினப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 2018 19 காலகட்டத்தில் 59,853 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியாணா மாநிலத்தில் குறைந்தளவு வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு மட்டுமல்ல பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் அதிகமான குற்றச்செயல்கள் உத்தரப் பிரதேசத்தில் தான் நடந்துள்ளன. உ.பி.யில் பட்டியலினப் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மட்டும் 11,829 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் உன்னாவோ சம்ப்வம், ஹத்ராஸ் சம்பவம், சாஃப்டர்ஜங் சம்பவம் என மறக்கமுடியாத பல பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அட்சி நடைபெறுகிறது. அங்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. உ.பியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே எதிர்க்கட்சிகள் பிரதான ஆயுதமாக கையில் எடுத்துள்ளன.