கடந்த வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்கு சென்று, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். பல்கலைக்கழகத்தின் அனுமதியின்று, ராகுல்காந்தி விடுதிக்கு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


மாணவர் விடுதிக்கு சென்ற ராகுல்காந்தி:


இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இசட்-பிளஸ் பாதுகாப்பை பெற்றுள்ள ராகுல்காந்தியின் இந்த செயல் கண்ணியத்திற்கு அப்பாற்பட்ட நடத்தை என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"அத்துமீறிய செயல். பொறுப்பற்ற நடத்தைக்கு சமம். பல்கலைக்கழக வளாகத்திற்குள் மூன்று வாகனங்களுடன் ராகுல்காந்தி எதிர்பாராத விதமாக நுழைந்தது விடுதியின் விதிகளை மீறும் செயல். எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க ராகுல்காந்தி கேட்டுக் கொள்ளப்படுகிறார். 


கடந்த 6ஆம் தேதி, டெல்லி பல்கலைக்கழக டீன் மற்றும் தாளாளர் முன்னிலையில் நடைபெற்ற ஹாஸ்டல் நிர்வாகக் குழு கூட்டத்தில், இசட்-பிளஸ் பாதுகாப்பு பெற்ற ராகுல்காந்தியின் செயல் கண்ணியத்திற்கு அப்பாற்பட்டது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.


நோட்டீஸ் அனுப்பிய டெல்லி பல்கலைக்கழகம்:


நிர்வாகத்தின் படி பரிந்துரைக்கப்பட்ட விதிகளுக்கு முரணான எந்தவொரு செயலையும் சுட்டிக்காட்டுவதற்கான உரிமையை விடுதி நிர்வாகம் கொண்டுள்ளது என்பதை குறிப்பிடத் தேவையில்லை. விடுதியில் முறையான ஒழுக்கத்தைப் பராமரிப்பதில் ஒரு முக்கியப் பகுதியாக, விடுதியின் தகவல் மற்றும் விதிகளின் கையேட்டின் விதி 15.13ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது அத்துமீறும் செயல். பொறுப்பற்ற நடத்தை என விடுதியின் நிர்வாக குழு தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஒரு சம்பவம், விடுதியில் இருந்த அனைத்து நபர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவித்துள்ளது.


மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, விடுதி குடியிருப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நல்வாழ்வு, பாதுகாப்புக்காக எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவிதமான விரும்பத்தகாத நடவடிக்கைகளையும் எடுப்பதை நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


பாதுகாப்பு கவலை:


விடுதிக்கு ராகுல் காந்தி சென்ற அடுத்த நாளே, அதை கண்டிக்கும் விதமாக டெல்லி பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ""திடீரென அனுமதி வாங்காமல் நுழைந்தது ஹாஸ்டலில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் தலைவருக்கு கடுமையான பாதுகாப்பு கவலைகளை எழுப்பியது.


பல்கலைக்கழக அதிகாரிகள் இந்த அத்துமீறல் போன்ற சம்பவங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். மேலும் இது எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள்" என குறிப்பிடப்பட்டது.  ராகுல் காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) குற்றம் சாட்டியது.