மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி, கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை, விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வெள்ளிக்கிழமை (அக்-14 ) உத்தரவிட்டது. 




வழக்கின் பின்னணி:


கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அமர்வு நீதிமன்றமானது, முன்னாள் பேராசிரியர் சாய்பாபா, ஒரு பத்திரிகையாளர் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலரை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு மற்றும் நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது.


இதையடுத்து மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக கூறி, டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா கைது செய்யப்பட்டார். அப்போது, உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 


கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜி.என்.சாய்பாபா உள்ளிட்டோர்கள் கைது செய்யப்பட்டனர்.  மாற்றுத்திறனாளியான ஜி.என்.சாய்பாபா சக்கர நாற்காலியில் செல்லும் வழக்கமுடையவர். தற்போது நாக்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மேல்முறையீடு:


இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மேலும் ஐந்து குற்றவாளிகளின் மேல்முறையீட்டையும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.


இந்நிலையில், இவ்வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, உடனடியாக விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது. இவ்வழக்கில் ஐந்து பேரில் ஒருவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


”விடுவிக்கப்படுவார் என்று நம்பினோம்”


இவ்வழக்கின் தீர்ப்பு தொடர்பாக பேசிய சாய்பாபாவின் மனைவி கூறியதாவது"அவர் விடுவிக்கப்படுவார் என்று நாங்கள் நம்பினோம், நீதித்துறைக்கும், எங்களை ஆதரித்தவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்று சாய்பாபாவின் மனைவி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.




இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம் லால் ஆனந்த் கல்லூரி, ஜி.என்.சாய்பாபாவை மீண்டும் பேராசியராக நியமிக்கும் விவகாரத்தை, அதன் நிர்வாகக் குழுவில் பிரதிநிதித்துவம் இருந்தால் எடுத்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


Also Read: Gujarat, HP Election 2022 Dates: குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்