குப்பை கழிவுகளை முறையற்ற முறையில் மேலாண்மை செய்தமைக்காக சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ .900 கோடியை செலுத்துமாறு டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் காசிப்பூர், பால்ஸ்வா மற்றும் ஓக்லா ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளை, சரியாக மேலாண்மை செய்யவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது.
300 லட்சம் மெட்ரிக் டன் குப்பை:
இவ்வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது, காசிப்பூர், பால்ஸ்வா மற்றும் ஓக்லா ஆகிய மூன்று குப்பைக் கிடங்குகளில் உள்ள குப்பை கழிவுகளின் அளவு 300 லட்சம் மெட்ரிக் டன்கள் இருப்பதாக தெரிவித்தது.
மேலும், சுமார் 80 சதவீத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படவில்லை என்றும் தீர்ப்பாயம் தெரிவித்தது. இந்த நிலை டெல்லியின் சுற்றுச் சூழல் குறித்த மோசமான நிலையை காண்பிப்பதாகவும் தீர்ப்பாயம் தெரிவித்தது.
குப்பை கிடங்குகளால், நிலத்தடி நீர் மாசுபடுவது மட்டுமன்றி, மீத்தேன் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் தொடர்ச்சியாக வெளியேறுகிறது. இதனால் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களின் சுவாசக் காற்றும், குடிக்கும் நீரும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரிதான மற்றும் விலை உயர்ந்த பொது நிலங்கள் குப்பை கொட்டும் இடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த மோசமான நிலைமையை சரிசெய்ய அவசரகால நடவடிக்கைகள் தேவை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்தது
ரூ.900 கோடி அபராதம்:
இந்த மூன்று குப்பைத் கூடங்களில் மலைபோல் குவிந்துள்ள, மூன்று கோடி மெட்ரிக் டன் அளவிலான கழிவுகளின் அளவைக் கருத்தில் கொண்டு, ரூ .900 கோடி சுற்றுச்சூழல் இழப்பீட்டாக வழங்க வேண்டும் என டெல்லி அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், புதிதாக உருவாகும் கழிவுகளை தற்போதைய கழிவுகளுடன் சேர்க்கப்படாமல் இருப்பதையும், விதிமுறைகளின்படி கழிவுகள் அகற்றப்படுவதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.
இதையடுத்து, குப்பைகள் அகற்றுவது தொடர்பான இடைக்கால அறிக்கையை டிசம்பர் 31, 2022 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.