தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தொடர்ந்து 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
காற்று மாசுபாடு Vs எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு
இந்நிலையில் இந்தியாவின் காற்றின் தரம் மோசமாகவும், காற்று மாசுபாடு மிகுந்த நகரமாகவும் உள்ள தலைநகர் டெல்லி, எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி முன்னதாக ஜனவரி மாதத்தில் மட்டும் டெல்லியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டீசல் வாகனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.
பழைய வாகனங்கள் குறித்து போக்குவரத்துத் துறை உரிமையாளர்களுக்கு மூன்று தேர்வுகளை வழங்கியது. அவை, வாகனத்தை அழிப்புக்கு அனுப்புவது அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மறுசீரமைப்பு உதவிகள் மூலம் மின்சார வாகனமாக மாற்றுவது அல்லது தடையில்லாச் சான்றிதழைப் பெற்று வேறு மாநிலங்களில் விற்பனை செய்வது.
நேராக வரத்தேவையில்லை, ஆன்லைன்லயே புதுப்பிக்கலாம்
இந்நிலையில், பழைய கார்களை எளிதாகவும், பொதுமக்கள் அணுகும் வகையிலும் மாற்றும் வகையில், எரிபொருள் மாற்றத்திற்கு விண்ணப்பிப்பது முதல் உற்பத்தியாளர்கள், பொருள்கள், விலை, டீலர்கள் மற்றும் கிட்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் வரை டெல்லி போக்குவரத்துத் துறை ஆன்லைனில் அனைத்து தகவல்களையும் வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அலுவலர்களுக்கும், தேசிய தகவல் மைய அலுவலர்களுக்குமிடையே முன்னதாக கூட்டம் நடைபெற்றுள்ளது.
சீரமைத்த வாகனங்களுக்கான மோட்டார் உரிமம்
அதன்படி, “பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மாற்றியமைப்பதற்கான விற்பனையாளர்கள் சர்வதேச ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜிஸ் மையம் (ICAT) மற்றும் இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் வாகன மாற்றத்திற்கு மக்கள் அணுக வேண்டிய டீலர்கள் மற்றும் மையங்களை நிறுவும்” என போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாகனத்தை மறுசீரமைத்த பிறகும், வாகன உரிமையாளர் நேரில் ஒப்புதலுக்காக மோட்டார் உரிம அலுவலர்களிடம் செல்ல வேண்டியதில்லை என்றும், ஆன்லைனிலேயே ஒப்புதலைப் பெறலாம் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: World No Tobacco Day 2022: ’புகையிலை எனும் மனித குல எதிரி’ - விழிப்புணர்வு பதிவுகளால் நிரம்பிய ட்விட்டர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்