டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9 வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை சத்யேந்தர் ஜெயின் நேற்று கைது செய்யப்பட்டநிலையில், இன்று ஜூன் 9 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி தொடர்பாக சத்யேந்திர ஜெயின் குடும்பத்தினர் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் ரூ.4.51 கோடியை அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கியது. பரிவர்த்தனை மோசடி தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தி நேற்று அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்தது.
டெல்லி துணை முதலமைச்சர் கூறியது என்ன..?
சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இமாச்சல் பிரதேசத்தில் மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இமாச்சல சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற எண்ணம் பாஜகவிற்கு வந்து விட்டது. அதனால் தான் இத்தகைய மறைமுக தாக்குதலை எதிர்க்கட்சியின் மீது பாஜக தொடுக்கிறது. இதே போன்று தான் அமலாக்கத்துறை, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சத்யேந்திர ஜெயினை விசாரணை செய்தது. ஆனால் அப்போது எதுவும் கண்டறிய முடியாததால் விடுதலை செய்தது. தற்போது தேர்தல் வருவதையொட்டி, இது போன்ற பொய்யான வழக்கில் கைது செய்யும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாக மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்