நாட்டின் தலைநகர் டெல்லியில் வரும் புதன்கிழமை வரை பல்வேறு இடங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படும் என்று டெல்லி மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வரலாறு காணாத அளவுக்கு பனி, குளிர் நிலவி வருகிறது. கடந்த ஜனவரி 5- ஆம் தேதி முதல் ஜனவரி 9 தேதி வரை டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இது கடந்த பத்தாண்டுகளில் டெல்லி சந்தித்திராத இரண்டாவது அதிகபட்ச குளிர்காலம் ஆகும்.
ஜனவரி 6- ஆம் தேதி காலை 1.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி குளிர் வாட்டி வதைத்தது. இதனால் அதிகாலை வேலைக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
டெல்லியில் அதிகரித்து வரும் குளிர் அலை காரணமாக, வீடற்ற மக்களுக்காக தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள வீடற்ற மக்கள், தேசிய தலைநகர் பகுதியில் நிலவும் குளிர் அலையில் இருந்து தப்பிக்க தங்குமிடங்களுக்கு சென்றனர். இந்த குறைந்த வெப்பநிலை, டெல்லியையே நடுங்க வைத்துள்ளது. மேலும், இது அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து 50 மணி நேர பனிமூட்டத்தை தலைநகரம் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு காலை வேளையில் கடும் பனிமூட்டம் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் வெப்பநிலை குறைந்தபட்சம் 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் வரும் 17 மற்றும் 18- ஆம் தேதிகளில் கடும் பனிமூட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குளிர் அதிகம் இருக்கும் வேளைகளில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் குளிருக்கு உகந்த உடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீடுகளில் ஹீட்டர், சாக்ஸ் உள்ளிட்ட குளிரை சமாளிக்கும் நடைமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜனவரி 18 முதல் 20 வரை குறைந்தபட்ச வெப்பநிலை படிப்படியாக 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.