ஆண்டுதோறும் ஜனவரி 26ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடக்கும். கம்பீரமாக நடைபெறும் இந்த அணிவகுப்பை காண்பதற்காக வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும், பொதுமக்களும் குவிவார்கள்.


இந்த நிலையில், முப்படைகளும் குடியரசு தின அணிவகுப்பிற்காக ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படை வீராங்கனைகள் கார்டவ்யா பாதையில் ஒத்திகையில் ஈடுபட்டனர். வட மாநிலங்களில் தற்போது குளிர் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, டெல்லியில் மிக கடுமையாக டெல்லியில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது.


கடுங்குளிரிலும் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒத்திகையில் ஈடுபட்ட வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.





நடப்பாண்டு கொண்டாடப்பட உள்ள 75வது குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு ப்ரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்திய நாட்டின் குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ப்ரான்ஸ் நாட்டின் அதிபர் பங்கேற்பது இது 6வது முறை ஆகும்.


குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நாட்டின் தேசிய கொடியை குடியரசுத் தலைவர் ஏற்றுவார். அதேபோல, ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசிய கொடி ஏற்றுவார்கள். தமிழ்நாட்டிலும் சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுவார். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காமராஜர் சாலையில் அணிவகுப்பு நடைபெறும்.


டெல்லியில் அணிவகுப்புடன் பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடக்கும். மேலும், இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெறும். தமிழ்நாட்டிலும் அணிவகுப்புடன் கண்கவர் கலைநிகழ்ச்சியும் நடக்கும். இந்த அணிவகுப்பு மரியாதையை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை அந்தந்த மாநில ஆளுநர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.


குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட உள்ளது. தற்போது முதலே பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.