முதல் திருமண விவாகரத்திற்கு பிறகு, இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணுடன் பாலியல் உறவு கொண்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை குற்றவாளி என கீழமை நீதிமன்றம் அறிவித்திருந்தது. பாதிக்கப்பட்ட பெண், ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறி, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 417இன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து:
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், "குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு திருமணமானதை அறிந்தே, பாதிக்கப்பட்ட பெண் அவருடன் லிவ்விங் டுகெதரில் வாழ முடிவு செய்துள்ளார். ஏனவே, விவாகரத்துக்கு பிறகு, இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி வேறு பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது ஏமாற்றுவதாக கருத முடியாது" என கருத்து தெரிவித்துள்ளது.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த குற்றம்சாட்டப்பட்ட நபரின் மனுவை விசாரித்த நீதிபதி சித்தார்த்தா ராய் சவுத்ரி, "இந்திய தண்டனை சட்டம் 415வது பிரிவின் விதியை செயல்படுத்த, குற்றம் சாட்டப்பட்ட நபர், பாதிக்கப்பட்டவரை தன்னுடன் இதுபோன்ற பாலியல் உறவில் ஈடுபடத் தூண்டினார் என்பதை நிரூபிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி:
குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயர் கௌரவ் பிர் பாஸ்நெட். இவர், பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது அலிபூர் நீதிமன்றம். 10 லட்சம் ரூபாயில் 8 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்க வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட கௌரவுடன் அவரது குடியிருப்பில் வாழ பாதிக்கப்பட்ட பெண் ஒப்புக்கொண்டார். கௌரவ், அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் பேசி, தனது முதல் மனைவியுடன் விவாகரத்து செய்வதாக உறுதி செய்தார். கட்டிடத்தில் உள்ள அனைவரும் தங்களை திருமணமான தம்பதிகள் என்று நினைத்ததாக அந்த பெண் கூறினார்.
இருவரும் ஒன்றாக சுற்றுலாவும் சென்றுள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கெளரவுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு, பிப்ரவரி 14ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர் மும்பைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்த பிறகு, முதல் மனைவியை விவாகரத்து செய்ய அவர் மறுத்துள்ளார். இது அவரது மகளையும் சமூகத்தில் அவரது குடும்பத்தின் கௌரவத்தையும் மோசமாக பாதிக்கும் என கௌரவ் விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட கௌரவுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம், 417/376 பிரிவின் கீழ் அந்தப் பெண் வழக்குப் பதிவு செய்தார்.