பாலியல் புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்:


இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மேற்கொண்ட போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தபோதிலும், அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.


பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்த நிலையில், டெல்லி காவல்துறை தொடர் விசாரணை மேற்கொண்டது. இதை தொடர்ந்து, இந்த வழக்கில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 


நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை பரபர வாதம்:


இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சிங்கை காவலில் எடுத்து விசாரிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தரப்பு இன்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கை பெருநகர நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் விசாரித்து வருகிறார்.


நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா, "பிரிஜ் பூஷன் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள செயலாளர் வினோத் தோமருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது குற்றம் பதிய வேண்டும். 


இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354(பெண்ணை மானபங்கம் செய்வது), 354-A(பாலியல் துன்புறுத்தல்), 354-D (பின்தொடர்தல்) ஆகியவற்றின் கீழ் பிரிஜ் பூஷன் சிங் மீது குற்றத்தை பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன" என்றார். இதை தொடர்ந்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்றைய தினம், புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர், அவருடைய தரப்பு வாதங்களை முன்வைப்பார்.


அதிர்வலைகளை ஏற்படுத்திய மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்:


முன்னதாக, இந்த வழக்கில், பிரிஜ் பூஷன் சிங்குக்கு பெருநகர நீதிமன்றம், கடந்த ஜூலை 20ஆம் தேதி, ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.


இந்த போராட்டம் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்திய நிலையில், "போராட்டத்தை கைவிட்டுவிட்டு நீதிமன்ற போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.