தெலங்கானாவில் மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தெலங்கானா மாநிலத்தில் தற்போது 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு தேர்வும் நடைபெறும்போதும் புதுபுது சர்ச்சைகள் வெடித்து வருகிறது. மொழித்தாள் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது தேர்வறை கண்காணிப்பாளர் வினாத்தாளை படம் பிடித்து மற்றொரு அரசு பள்ளி ஆசிரியருக்கு அனுப்பி வைத்தார். இந்த விவகாரம் இணையத்திலும், ஊடகத்திலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாநில அரசு தேர்வறை கண்காணிப்பாளர் உட்பட 4 பேரை சஸ்பெண்ட் செய்தது. 


ஆனால் இவ்விவகாரத்தில் மாநில கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனிடையே மாநிலத்தில் இந்தி தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுதொடர்பாக நடந்த விசாரணையில் கமலாபூர் தேர்வு மையத்தில் இருந்து பாஜகவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் வாட்ஸ்அப் வழியாக வினாத்தாளை லீக் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 






இவர் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமாருக்கு வினாத்தாளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பண்டி சஞ்சய் குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர் மருத்துவப் பரிசோதனைக்காக பாலகுர்த்தியில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் சென்ற வாகனத்தை தொண்டர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


 இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  தனது முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்களை வெளியிடுமாறு முதல்வர் சந்திரசேகர் ராவிடம் சொன்ன ஒரு நாள் கழித்து தான் நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் ஆளும் கட்சியின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார். 


மேலும் ஏப்ரல் 8 ஆம் தேதி செகந்திராபாத்தில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க  தெலுங்கானாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடியின் பயணத்தை சீர்குலைக்கும் ‘சட்டவிரோத’ நடவடிக்கை என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் பிரேமேந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார். 


பிரதமர் வருகை தரும் நேரத்தில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பாஜக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் மாநில அரசுக்கு எதிராக தனது கண்டனங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: Actress Shruthi Rajanikanth: மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் பிரபல மலையாள நடிகை.. சோகத்தில் ரசிகர்கள்