நாடு முழுவதும் குண்டுவெடிப்பு நடத்த மிகப்பெரிய அளவில் சதித்திட்டம் தீட்டியிருந்த பயங்கரவாதிகள் 6 பேரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.


அடுத்த மாதம் முதல் தசரா, ஆயுதபூஜை, தீபாவளி என தொடர்ந்து பண்டிகைகள் வர இருக்கின்றன. முக்கியமாக இந்த பண்டிகைகள் வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த நேரங்களில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த சிலர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடந்து, தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இரண்டு பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 6 பேரை கைது செய்துள்ளனர்.


இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு ஆணையர் நீரஜ் தாக்கூர், இணை ஆணையர் பிரமோத் குஷ்வாஹா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாகிஸ்தான் பயிற்சி பெற்ற இரண்டு பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் ஆறு பயங்கரவாதிகளை நாங்கள் கைது செய்துள்ளோம். இவர்கள் இந்தியாவில் உள்ள நகரங்களின் சில முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுத்து, டிசிபி பிரமோத் மிஸ்ரா மேற்பார்வையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது.


செவ்வாய்க்கிழமை காலை, நாங்கள் பல மாநிலங்களில் சோதனை நடத்தினோம். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து  சமீர், டெல்லியில் இருந்து இரண்டு பேர் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளோம். 6 பேரில் இருவர் மஸ்கட் வழியாக பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு ஏகே-47 உள்ளிட்ட வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகளில் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி சுமார் 15 நாட்கள் தொடர்ந்தது.


கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் குழுவில் 14-15 வங்க மொழி பேசும் நபர்கள் இதே போன்ற பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியதாக தெரிவித்தனர். அவர்கள் 2 குழுக்களை அமைத்தனர். ஒன்று தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அநீஸ் இப்ராஹிம் என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்டது” என்று கூறினார்.






 கைது செய்யப்பட்ட 6 பயங்கரவாதிகள் ஜான் முகமது ஷீக் (47), ஒசாமா சாமி (22), மூல்சந்த் லாலா (47), ஜீஷன் கமல் (28), முகமது அபு பக்கர் (23), முகமது ஜாவேத் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.