டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


இந்த கொலை வழக்கில் முக்கிய தகவல் ஒன்றை டெல்லி காவல்துறை வட்டாரம் இன்று பகிர்ந்துள்ளது. அதாவது, தனது லிவ்-இன் பார்ட்னர் ஷ்ரத்தாவின் அடையாளத்தை மறைப்பதற்காக அவரின் முகத்தை அப்தாப் எரித்திருப்பது தெரிய வந்துள்ளது. 


அவர் முதலில் ஷர்த்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, பின்னர் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அடையாளம் தெரியாத வகையில் முகத்தை எரித்திருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


"எப்படி கொலை செய்ய வேண்டும், அதை எப்படி மறைக்க வேண்டும் என்பதை அப்தாப் இணையத்தில் கற்றுக்கொண்டுள்ளார். விசாரணையின்போது, இதை அப்தாபே தெரிவித்துள்ளார்" என காவல்துறை தரப்பு கூறியுள்ளது.


 






கடந்த ஜூன் மாதமே, மனித தலை உள்பட வெட்டப்பட்ட உடல் பாகங்களை டெல்லி கிழக்கு காவல்துறை கண்டறிந்தது. இருப்பினும், பிரேதத்தின் அடையாளம் தெரியாத காரணத்தால் காவல்துறை தவித்து வந்துள்ளது. 


இதற்கு மத்தியில், டெல்லி கொலை வழக்கு வெளியே தெரிந்த நிலையில்,  ஜூன் மாதம் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ஷர்த்தாவுடையதா என்பதை கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்த டெல்லி கிழக்கு காவல்துறை தெற்கு மாவட்ட காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளது.


இந்நிலையில், இந்த கொலையில் பாதிக்கப்பட்ட ஷர்த்தாவின் மீதே மத்திய அமைச்சர் குறை கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய அமைச்சர் கௌசல் கிஷோரின் கருத்து பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், அவரிடமே இதுகுறித்து கேட்கப்பட்டது. 


அதற்கு பதிலளித்த அவர், "லிவ்-இன் உறவுகளுக்காக பெற்றோரை விட்டுவிட்டு செல்லும் படித்த பெண்களையே இதில் குற்ற சொல்ல வேண்டும். இச்சம்பவத்திற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். அவரின் அம்மா எதிர்த்திருக்கிறார். அப்பா எதிர்த்திருக்கிறார். படித்த ஒரு பெண் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அது தவறு.


அவர்கள் (லிவ்-இன் ரிலேஷன்ஷிப்) ஈடுபட்டுள்ளார்கள். உண்மையாகவே யாரையாவது காதலித்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள். முதலில். இது என்ன மாதிரியான உறவு? இத்தகைய உறவுகள் குற்றங்களை ஊக்குவிக்கின்றன" என்றார்.