டெல்லி கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார். விசாரணைக்கு பிறகு, கைது செய்யப்பட்ட அப்தாப் தற்போது சிறையில் உள்ளார்.


இதற்கிடையே, டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் அவர் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அதை தவறுதலாக தாக்கல் செய்துவிட்டதாகக் கூறி மனுவை திருபெற்றார். எனவே, பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 


வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான அப்தாப், டிசம்பர் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை திரும்பப் பெற விரும்புவதாக கூறினார்.


நீதிமன்றத்தில் ஆஜரான அப்தாப்பின் வழக்கறிஞர் எம்.எஸ். கான், "தனக்கும் தன்னுடைய கட்சிதாரர் ஆகியோருக்கிடையே நிலவிய தவறாக புரிதல் காரணமாக பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது" என்றார்.


வாதத்தை கேட்டறிந்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விருந்தா குமாரி, "பிணை மனு திரும்பப் பெறப்பட்டதால் அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என்றார். 


ஷ்ரத்தாவின் தந்தை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா, "குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், அப்தாபின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.


ஜாமீன் மனு தாக்கல் செய்ய தனது வழக்கறிஞருக்கு அனுமதி அளிக்க அப்தாப் மறுத்துள்ளார். அவருடைய வக்கீல் முதலில் மனித நேயத்திற்காகவும் நின்றிருக்க வேண்டும். இருப்பினும், இன்று அவர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்" என்றார்.


பிணை மனவில் கையொப்பமிட்டிருந்தாலும், தனது வழக்கறிஞர் தன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் போகிறார் என்பது தனக்குத் தெரியாது என்று அப்தாப் மின்னஞ்சல் மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.


அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 


வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி வெட்டப்பட்ட உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.


இதற்கு மத்தியில், மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் சில மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. மண்டை ஓட்டின் அடிப்பகுதி, துண்டிக்கப்பட்ட தாடை பகுதி மற்றும் பல எலும்புகள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.


நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனையில், கண்டெடுக்கப்பட்ட எலும்பில் இருந்து டிஎன்ஏவும் ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏவும் பொருந்தி போனது.