Delhi murder case: டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் மனதை உலுக்கியது. 
 
ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அவர் தவறான தகவல்களை அளித்து விசாரணை திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இதையடுத்து, அவருக்கு உண்மையை கண்டறியும் சோதனை நடத்த தெற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், அவருக்கு பாலிகிராஃப் மற்றும் நார்கோ சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. இந்ந சூழலில் அவருக்கு அன்று பாலிகிராஃப் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த சோதனையில் அவரின் ரத்த அழுத்தம், துடிப்பு, சுவாசம், தோல் கடத்துத்திறன் போன்ற உடலியல் குறிகாட்டிகள் அளவிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.


அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தனது காதலியான ஷ்ரத்தாவை கொன்றதாக ஆப்தாப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், கொலை செய்ததற்கு அவர் வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை என சோதனை நடத்திய குழுவில் இடம்பெற்றவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 


பாலிகிராஃப் சோதனையில் அல்லது அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நார்கோ சோதனையில் இதுபோன்ற ஒப்புதல் வாக்குமூலம் வழக்கமாக ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால், அதன் வழியாக வெளிவரும் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்று கொள்ளும்.


அடுத்ததாக, டிசம்பர் 1ஆம் தேதி, நார்கோ சோதனை என்றழைக்கப்படும் பொய் கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. இந்தச் சோதனையில், 'ட்ரூத் சீரம்' எனப்படும் சோடியம் பெண்டோதல் குறிப்பிட்ட நபருக்கு செலுத்தப்பட்டு, ஒரு ஹிப்னாடிக் மனநிலையைத் தூண்டி, கற்பனையை நடுநிலையாக்கும்.


இந்த அமைதியான மனநிலையில், ஒரு நபர் உண்மையைப் பேசுகிறார் என்று நம்பப்படுகிறது. இந்த மருந்து அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்தாக அதிக அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது.


கொலையை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்காதபோது, விசாரணை அமைப்புகள் இந்த சோதனைகளை நடத்துகிறது.


உதாரணமாக, இந்த வழக்கில், கொலை மே மாதம் செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ஷ்ரத்தாவுடையது என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. டிஎன்ஏ சோதனை அறிக்கைக்காக காவல்துறை காத்து கொண்டிருக்கிறது.


கொலை குறித்து முக்கிய தகவல் ஒன்றை டெல்லி காவல்துறை வட்டாரம் சமீபத்தில் பகிர்ந்தது. அதாவது, கொலை செய்த பிறகு ஷ்ரத்தாவின் அடையாளத்தை மறைப்பதற்காக அவரின் முகத்தை ஆப்தாப் எரித்திருப்பது தெரிய வந்தது. 


முதலில் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, பின்னர் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அடையாளம் தெரியாத வகையில் முகத்தை எரித்திருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


"எப்படி கொலை செய்ய வேண்டும், அதை எப்படி மறைக்க வேண்டும் என்பதை ஆப்தாப் இணையத்தில் கற்றுக்கொண்டுள்ளார். விசாரணையின்போது, இதை ஆப்தாப் தெரிவித்துள்ளார்" என காவல்துறை தரப்பு கூறியுள்ளது.