உயர்ந்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யபடவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.
எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுனர்கள் தானாகவே உயர்த்தி வசூலித்து வருவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த உத்தரவின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க கோரியும், மின்னணு மீட்டர்களில் தானாகவே கட்டணத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தையும் அமல்படுத்த வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 191 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.
அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.