டெல்லி திகார் சிறையில் உள்ள கைதி ஒருவர் சோதனையின்போது  சிறை அதிகாரிகளிடம் இருந்து மறைக்க மொபைல் போனை விழுங்கியுள்ளார். இந்த சம்பவம் இதுவரை கண்டிராத சம்பவமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. பின்னர் கைதியின் வயிற்றின் எண்டோஸ்கோப்பி மூலம் செல்போனை  மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.


கடந்த ஜனவரி 5 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் சிறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இதனை அறிந்துக் கொண்ட கைதி ஒருவர் தனது  செல்போனை விழுங்கினார். ஆனால், அதன்பிறகு அவருக்கு தீவிர வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சிறை அதிகாரிகளிடம் இதுபற்றி கூறியுள்ளார்.


உடனே, அந்த கைதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் ஒரு வாரம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கைதியின் வயிற்றில் இருந்த 7 சென்டிமீட்டர் நீளமுள்ள செல்போனை எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் அவரது வாய் வழியாக வெளியே மருத்துவர்கள் எடுத்தனர்.




டாக்டர் சித்தார்த் மற்றும் இரைப்பை குடல் துறையின் டாக்டர் மணீஷ் தோமர் தலைமையிலான ஜிபி பண்ட் மருத்துவமனையின் குழுவால் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


இதுகுறித்து இரைப்பை குடல் துறை டாக்டர் சித்தார்த் கூறுகையில், கடந்த ஜனவரி 15ஆம் தேதி ஏதோ விழுங்கியதாக ஒரு நோயாளி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரது வயிற்றில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் அது செல்போனாக இருக்கலாம் என்று தெரியவந்தது. வாய் வழியாக எண்டோஸ்கோபி செய்து செல்போன் எடுக்கப்பட்டது. 


செல்போனை விழுங்குவது கடினம், அதைச் செய்யும் பழக்கமுள்ளவர்கள் மட்டுமே அதைச் செய்ய முடியும். பொதுவாக சிறைக் கைதிகள் அதிகாரிகளிடமிருந்து மறைக்க இவ்வாறு செய்வார்கள். இதைச் செய்யப் பழகியவர்களால் மட்டுமே விழுங்க முடியும். இது தொழில்நுட்ப ரீதியாக தேவைப்படும் செயல்முறை மற்றும் பெரிய பொருளை வெளியே எடுக்க திறமை தேவை. இதுவரை இதேபோன்ற பத்து வழக்குகளை மருத்துவமனையில் கையாண்டுள்ளேன்” என்று கூறினார்.


கடந்த ஆண்டு நவம்பர் மாதம், திகார் சிறை வளாகத்தில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க மூன்று மொபைல் ஜாமர்கள் பொருத்தப்பட்டன.


குற்றவாளி சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் 5  சிறை அதிகாரிகளை டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு  கைது செய்ததை அடுத்து ஜாமர்கள் நிறுவப்பட்டன.


இந்த வழக்கின் விசாரணையில், சுகேஷ் சிறைக்குள் இருந்து அதிகாரிகள் உதவியுடன் மொபைல் போன் மூலம் தனது மோசடியை நடத்தி வந்தது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண