செய்தி தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாத நிகழ்ச்சிகளால் கோபம் கொள்பவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களால் இந்த செய்தியோடு பொருந்திக் கொள்ள முடியும். நாம் பேசுவது கேட்கப்பட வேண்டும் என்பதற்காக நம்மால் எந்த எல்லைக்கும் செல்ல முடியும். லைவ் தொலைக்காட்சியில் நடனம் ஆடி, தன் குரல் உரக்க ஒலிக்க முயன்றுள்ளார் கொல்கத்தாவில் பெண் ஒருவர்.


தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நெறியாளர் பேசுவதற்கு அனுமதிக்காததால், பேசுவதற்காக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் நடனம் ஆடத் தொடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரோஷினி அலி இந்த நடனத்தை ஆடியுள்ளார். ரோஷினி அலிக்கு விவாத நிகழ்ச்சியில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படாததால் அவர் கோபத்தில் நடனமாடியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு, ரோஷினி அலி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பட்டாசுகள் மீது தடை விதிக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். 



கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்ஸிஜன் குறைபாடு இருப்பதைக் காரணம் காட்டி, பட்டாசுகள் தடை செய்யப்பட வேண்டும் என வாதாடியுள்ளார் ரோஷினி அலி. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது கொரோனா நோயாளிகளின் சூழலை மோசமாக்கும் எனக் கூறியுள்ளார். எனினும் தொலைக்காட்சி விவாதத்தில் அவர் பேசுவதற்கு நேரம் வழங்கப்படாததால், கவனத்தை ஈர்க்கும் விதமாக நடனம் ஆடி தன்னைப் பேச விடுமாறு கூறியுள்ளார். 


 






கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் கொல்கத்தா உயர் நீதிமன்றம் பட்டாசுகள் மீது விதித்த தடையை நீக்கியது. மேலும், பட்டாசுகளை முழுமையாகத் தடை விதிக்க முடியாது எனக் கூறிய உச்ச நீதிமன்றம் தொடர்ந்து காற்று மாசு அளவு குறைவாக உள்ள பகுதிகளில் பச்சைப் பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் கூறியது. 



ரோஷினி அலி


 


ட்விட்டரில் `எலிசபெத்’ என்ற பெயர் கொண்ட அக்கவுண்ட் ஒன்றில் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான போதும், இந்த வீடியோ வைரலாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவைப் பலரும் பார்வையிட்டுள்ளதோடு, இதனை ட்ரோல் செய்து பல்வேறு மீம்கள், GIFகள் முதலானவற்றோடு இதனைப் பகிர்ந்தும் வருகின்றனர் நெட்டிசன்கள்.