டெல்லியின் திலக் நகர் பகுதியில் மெட்ரோ ரயில் செல்லும் தண்டவாளப் பாதையில் ஒரு பயணி நடந்து சென்றதால், திலக் நகர், கரோல் பாக் முதலான பகுதிகளுக்கு இடையில் பயணிக்கும் ப்ளூ லைன் மெட்ரோ ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 15 நிமிடங்கள் ஏற்பட்ட இந்தத் தாமதத்திற்குப் பிறகு, வழக்கம் போல மீண்டும் ரயில்கள் இயங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதே ப்ளூ லைன் மெட்ரோ ரயில்கள் தடத்தில் நேற்றும் இதே போல தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டு, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சமூக வலைத்தளமான ட்விட்டர் தளத்தில் பயணிகளுக்கு அறிவிப்புக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. `துவாரகா செக்டார் 21 முதல் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி, வைஷாலி முதலான நிலையங்களுக்குச் செல்லும் ரயில்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற வழித்தடங்களில் வழக்கம் போல ரயில் சேவைகள் தொடரும்’ என அந்தக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சார்பில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், காலை 9.10 முதல் 10 மணி வரை சிக்னல் தொடர்பான பிரச்னைகள் காரணமாக ப்ளூ வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக வந்தடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
`சிக்னல் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, இந்தக் கால கட்டத்திற்குள் மெட்ரோ ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது. காலை 10 மணிக்கு சிக்னல் தொடர்பான பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டவுடன், அந்த வழித்தடம் முழுவதும் வழக்கம் போல மெட்ரோ ரயில் சேவை படிப்படியாக தாமதமின்றி அமல்படுத்தப்பட்டன’ என இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில்களின் ப்ளூ வழித்தடத்தில் செல்லும் மெட்ரோ ரயில்கள் வைஷாலி பகுதியில் இருந்து துவாரகா பகுதி வரை சென்று சேர்கின்றன. டெல்லி மெட்ரோ ரயில்களின் தாமதமான வருகை காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியதாகத் தங்கள் கண்டனங்களையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.