Delhi MCD Results 2022: டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மியை ஓரம் கட்டிவிட்டு பாஜக மீண்டும் வெற்றிக்கொடியை நாட்ட போட்டாபோட்டி போட்டுக்கொண்டு உள்ளது. 


டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்தது. 


கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் அரவிந்த் கெஜிர்வால் முதல்வராக உள்ளார். இவரது கட்சியான ஆம் ஆத்மி கட்சி இந்த மாநகராட்சித் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று தனது பலத்தினை நிரூபிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆம் ஆத்மி இந்த தேர்தலில்  149 முதல் 171 இடங்களை பெறும் என கருத்து கணிப்புகள் கூறின. அதேபோல் பாஜக 69 முதல் 90 வார்டுகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளும் கூறின. 


மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 50% வாக்குகளே பதிவானது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி 101 இடங்களில் முன்னிலை வகித்தது.  பாரதிய ஜனதா கட்சி 89 இடங்களில் முன்னிலை வகித்தது. கருத்துக் கணிப்புகளில் கூறியதைப் போலவே, காங்கிரஸ் கட்சி வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






ஏற்கனவே டெல்லி மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கரமே தொடர்ந்து மூன்று முறை ஓங்கி உள்ளது. ஆனால் இந்த முறை ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி குறித்து மக்களிடத்தில் உள்ள நன்மதிப்பால்,  ஆம் ஆத்மியின் கோட்டையாகவே டெல்லி மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும்,  மிகவும் பலமாக இருந்து வந்த பாரதிய ஜனதாவை ஆம் ஆத்மி இந்த முறை ஓரம் கட்ட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கருத்து கணிப்புகள் கூறிவந்தது. அதற்கு ஏற்றவாறு வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் அமைந்தது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஆம் ஆத்மியின் கரமே ஓங்கியும் இருந்தது. ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து எண்ணப்பட்ட வாக்குகளில் போது படிப்படியாக பாஜகவின் கரங்களும் ஓங்கியது. தற்போது இரு கட்சிகளுக்கும் இடையில் டெல்லியைக் கைப்பற்ற போட்டா போட்டி நிலவுகிறது. தற்போது ஆம் ஆத்மி 75 இடங்களையும், பாஜக 55 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.  


ஏற்கனவே மூன்று முறை மாநகராட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா இந்த முறை கடும் போட்டிக்கு மத்தியில்  மாநகராட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மியுடன் போட்டா போட்டி போட்டுவருகிறது.