தற்கொலைகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அது குறைந்தபாடில்லை. பெரும்பாலான நேரங்களில் உளவியல் பிரச்னை காரணமாவே தற்கொலை சம்பவங்கள் நிகழ்கிறது. இந்த சூழ்நிலையில், டெல்லியில் நடந்துள்ள தற்கொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


டெல்லியில் அதிர்ச்சி:


டெல்லியில் 24 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விடுதி ஒன்றில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் மூலம் அதிக அளவில் ஆக்ஸிஜனை சுவாசித்ததே அவரது உயிரிழப்பிற்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


மருத்துவமனையில் தனது சிகிச்சைக்கான செலவு அதிகரித்ததால் அதனை தாங்கி கொள்ள முடியாமல் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தவரின் பெயர் நிதேஷ். வடக்கு டெல்லியில் உள்ள ஆதர்ஷ் நகரில் விடுதி ஒன்றில் தங்குவதற்காக இவர் புக் செய்துள்ளார். தங்கும் விடுதிக்குள் இவர் சிறிய பையை எடுத்து சென்றுள்ளார். 


வித்தியாசமான முறையில் தற்கொலை:


இந்த சம்பவம் குறித்து விளக்கியுள்ள காவல்துறை தரப்பு, "முகத்தை பிளாஸ்டிக் பை மூடிய படி இறந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த பிளாஸ்டிக் பையில் இருந்து ஒரு சிறிய குழாய் சின்ன ஆக்ஸிஜன் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆக்ஸிஜனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, ​​ஆக்சிஜன் இதயத் துடிப்பைக் குறைத்து, ஆபாய கட்டத்திற்கு இட்டு செல்லும்" என தெரிவித்தது.


நிதேஷ் விட்டு சென்ற தற்கொலை கடிதத்தை காவல்துறை கைப்பற்றியுள்ளது. அதில், அவர் நீண்ட காலமாக  நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், சிகிச்சைக்கான செலவு அதிகரித்துள்ளது. தனக்காக தனது பெற்றோர் அதிகமாக செலவிடுவதை விரும்பாமல், வலி இன்றி தற்கொலை செய்து கொள்வதற்கான வழியை  இணையத்தில் தேடியுள்ளார். இதற்காக தீவிரமாக இணையத்தை ஆராய்ந்த அவர் இந்த முறையை கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பான பல வீடியோக்களையும் கூட பார்த்துள்ளார் என காவல்துறை தரப்பு கூறியுள்ளது.


தற்கொலை சம்பவங்கள்:


கடந்த ஆண்டு, நாடு முழுவதும் நடைபெற்ற கொலைக் குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டது. அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.


இந்தியாவிலேயே அதிகமாக தற்கொலைகள் நடைபெற்ற மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடம் பிடித்திருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் 22,207 பேரும், இரண்டாவது இடமான தமிழ்நாட்டில் 18,925 பேரும், மூன்றாவது இடத்தில் உள்ள மத்திய பிரதேசத்தில் 14,965 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம்: 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050