தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியின் மையப்பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த ஒருவர், கொடூரமான முறையில் 12 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் அவரது உடமைகளுடன் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள், ஒரு வாரத்திற்கும் மேலாக, தலைமறைவாக உள்ளனர்.


டெல்லியின் மோதி நகரில் வசிப்பவர் ஹர்ஷ் சவுத்ரி. இவருக்கு வயது 35. பஸ்சிம் விஹாரில் உள்ள ஓடு தொழிற்சாலையில் இவர் வேலை செய்து வந்தார். அக்டோபர் 22ஆம் தேதி இரவு, வேலை முடிந்து, முல்தான் நகர் பேருந்து நிறுத்தத்தில் அவர் காத்திருந்தபோது, ​​ஒரு கும்பல் அவரைத் தாக்கியதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


குடல் வெளியே வரும் அளவுக்கு கொடூரமாக கத்தியால் குத்தி உள்ளார்கள். பின்னர், அவரது தொலைபேசி மற்றும் பணப்பையை எடுத்துச் சென்றனர். போலீசார் ஹர்ஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


ஹர்ஷின் குடும்பத்தினர் இரவு முழுவதும் அவருக்காக காத்திருந்ததாகவும், அடுத்த நாள் வரை இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். ஹர்ஷை பற்றி அறிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர். அவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோர் உள்ளனர்.


ஹர்ஷ்தான் அவரது குடும்பத்தின் ஒரே ஆதாரம். அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரை ஒரு உதவிகரமான மனிதர் என்றும், சமூகத்தால் நன்கு விரும்பப்பட்டவர் என்றும் கூறுகின்றனர். தற்போது, அவரது குடும்பத்தினர் நீதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.


போலீசார் வழக்குப்பதிவு செய்தும், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தப்பிச் செல்வதைக் காணக்கூடிய சில கண்காணிப்பு காட்சிகள் அருகிலுள்ள பகுதியில் கிடைத்ததாக காவல்துறை கூறியுள்ளது.


சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.


சமீபத்திய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்கள்தொகையில் ஒரு லட்சத்திற்கு குறைவான எண்ணிக்கையிலான குற்றங்கள் நடைபெறும் நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது.


அடையாளம் காணக்கூடிய குற்றங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இரண்டாவது இடத்தில் புனேயும், மூன்றாம் இடத்தில் ஹைதராபாத்தும் உள்ளன என்று தரவுகள் காட்டுகின்றன. இவற்றை தொடர்ந்து கான்பூர், பெங்களூரு மற்றும் மும்பை ஆகியவை பட்டியலில் உள்ள மற்ற நகரங்களில் ஆகும். 


அறிக்கையின்படி, கொல்கத்தாவின் குற்ற விகிதம் 2021 இல் 92.6 ஆகக் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு 109.9 ஆக இருந்தது. கொல்கத்தாவின் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து நிபுணர்கள் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.


"இந்த தரவு மிகவும் அபத்தமானது போல் தெரிகிறது. மாநில அரசின் தரப்பில் உண்மைகள் தெளிவாக மறைக்கப்பட்டுள்ளன, கொல்கத்தாவில் பெரும்பாலான குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. ஆனால், அவை புகாரளிக்கப்படவில்லை. மேலும் அதிகாரிகள் வழங்கிய தரவு உண்மையானது அல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று பிடிஐ-இடம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் முன்னாள் தலைவரும், மதம் மற்றும் சமூகம் பற்றிய ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான ரூபி சைன் கூறியிருந்தார்.