Delhi Crime: டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.


டெல்லியில் பயங்கரம்:


இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  குறிப்பாக டெல்லியில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது கூட 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


அதாவது, வடக்கு டெல்லியின் ஸ்வரூப் நகரில் வசிக்கும்  ஒரு குடும்பத்தினர் தங்களது குழந்தை காணவில்லை என்று டிசம்பர் 12ஆம் தேதி புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சிறுமி கடத்தப்பட்டது தெரியவந்தது.  சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சிறுமியை கடத்திய நபரை டிசம்பர் 17ஆம் தேதி கைது செய்து விசாரித்தனர். அப்போது அந்த நபர்  சில திடுக்கிடும் தகவல்களை கூறினார். 


கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி:


டிசம்பர் 12-ஆம் தேதி மாலை வீட்டிற்கு வெளியே 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது, 52 வயதான நபர், சிறுமியை காரில் சவாரிக்கு அழைத்து செல்வதாக கூறி, சிறுமியை காரில் ஏற்றியுள்ளார். பின்னர், சிறுமியை காரில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். சிறுமியின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் போட்டு கால்வாயில் வீசியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், சிறுமியின் உடல் தற்போது வரை கிடைக்கவில்லை.  


சிறுமியை கொலை செய்த நபருக்கு 52 வயது என்றும், இவர் வீட்டின் உரிமையாளர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.  9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 52 வயது நபர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி  மகளிர் ஆணையம் ஸ்வரூப் நகர் காவல்நிலையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், "நாங்கள் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறோம். என் மகளுக்கு நடந்த கொடுமை, எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது. என் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொலை செய்தவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். 




மேலும் படிக்க


Covid Cases: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா.. ஒரே நாளில் 341 பாதிப்பு.. தமிழ்நாட்டின் நிலை என்ன?