Covid Cases: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


மீண்டும் அலற வைக்கும் கொரோனா:


கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து, கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி


இச்சூழலில், கடந்த சில வாரங்களாகவே கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதனால், அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, கேரளாவில் JN.1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், இந்த வகை கொரோனா பரவிய நிலையில், தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.  இந்த வகை கொரோனா வைரஸ் மூலம் கூடுதல் ஆபத்துகள் ஏற்படாது என்றும், பனிக்காலம் என்பதால் சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


ஒரே நாளில் 341 பேருக்கு கொரோனா பாதிப்பு


இதற்கிடையில், இந்தியாவில் நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 341 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது. கேரளாவில் மட்டும் ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லி, குஜராத், பஞ்சாபில் தலா 3 பேருக்கும், கர்நாடகாவில் 9 பேருக்கும், மகராஷ்டிராவில் 11 பேருக்கும், புதுச்சேரி, தெலங்கானாவில் தலா 4 பேருக்கும், தமிழ்நாட்டில் 13 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


எனவே, ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 2,311 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் 3 பேர்  உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மட்டும்  மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, கொரோனாவால் இதுவரை 5,33,321 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு என்பது 4.50 கோடியாக உயர்ந்துள்ளது.  மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து  270 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனா தொற்றால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 44.47 கோடியாக அதிகரித்துள்ளது. 






இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், "கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும்  அனைத்து மாநிலங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும்,  மாநிலங்கள் தங்களது மாவட்ட வாரியான கோவிட் பாதிப்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.