நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 13-ஆம் தேதி கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கம்போல் அவை இயங்கி வந்ததது. இந்நிலையில் அன்று மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து  2 பேர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து கீழே குதித்து, கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகளை வீசினர். அதனை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி மக்களவையில் போராட்டம் நடத்தியதால் திமுக எம்பி கனிமொழி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்பிக்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  இச்சூழலில், அதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலிருந்தும் நேற்று முன் தினம் 30 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மொத்தமாக நேற்று முன் தினம் வரை 46 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அமளியில் ஈடுப்பட்டனர். அப்போது இதுவரை இல்லாத வகையில் மொத்தமாக இரு அவைகளில் இருந்தும் 141 எம்.பிக்கள் சஸ்பெண்ட செய்யப்பட்டனர்.






எம்.பிக்கள் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்படுவது பெரும் எதிர்ப்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் இன்று கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தாமஸ் சாழிக்கடன் மற்றும் ஏ.எம். ஆரிஃப் ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.






இது தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி தாமஸ் சாழிக்கடன், ”எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைக்கு வந்து, நாடாளுமன்ற விதுமீறல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.






அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆரிஃப் கூறுகையில், ” நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதனை தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். கடைசியில் எங்களை இடைநீக்கம் செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.