டெல்லியில் இன்று தொடங்கி 6 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் அதிக அளவில் குவிந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் கொரோனாவின் தாக்கம் இரண்டாவது அலையில் மீக தீவிரமாக பரவி வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து கொரோனாவின் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் இரவு 10 மணியளவில் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் பெருமளவில் கூடியது கொரோனா பரவல் அச்சத்தை அதிகரித்துள்ளது. 




டெல்லியில் தினமும் 20,000 அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென்று அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால் வெளிமாநில தொழிலாளர்கள் செய்வதறியாது சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர். தினக்கூலியை நம்பி வாழும் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் மீண்டும் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது தொடர்கதையாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆக்சிஜென் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளதாக கூறினார். மேலும் டெல்லிக்கு என்று ஒதுக்கப்பட்ட ஆக்சிஜென் சிலிண்டர்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும் கூறினார்.        




டெல்லி மட்டுமின்றி தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வருகின்றது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அத்யாவசிய சேவைகள் தவிர பிற சேவைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கும் அமலுக்கு வரவுள்ளது. அன்றைய தினம் குறிப்பிட்ட நேர அளவில் உணவு கடைகள் பார்சல் மட்டும் வழங்கலாம். மேலும் பொதுப்போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள இரவு நேர ஊரடங்கினால் பேருந்து இயக்கத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவ தொடங்கி ஓர் ஆண்டை கடந்துவிட்ட நிலையில் இன்றளவும் வீரியம் குறையாமல் பரவி வருவது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு வுஹான் நகரில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டபோது இந்த அளவிற்கு பரவி உலகையே ஸ்தம்பிக்கவைக்கும் என்று யாரும் யூகித்திருக்க முடியாது. 


இந்த இக்கட்டான சூழலில் மக்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து பாதுகாப்புடன் செயல்படுவது மட்டுமே சிறந்த பலனளிக்கும் வழியாக பார்க்கப்படுகிறது.