டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.


பரபரப்பை ஏற்படுத்திய குற்றப்பத்திரிகை:


தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புட்சி பாபு, அர்ஜுன் பாண்டே மற்றும் அமந்தீப் தால் ஆகியோரின் பெயர்கள் கூடுதல் குற்றப்பத்திரிகையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களின் பங்கு குறித்து மேலும் விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. கடந்த வாரம், இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சாட்சியாக 9 மணி நேரம் சிபிஐ விசாரித்தது. இந்த வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளும் பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவருமான கவிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


பொய்யாக தொடுக்கப்பட்ட வழக்கு என இதனை விமரிசித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், "ஆம் ஆத்மி தேசியக் கட்சியாக மாறியுள்ளதால், மத்திய அரசு எங்களை குறிவைக்கின்றனர். நம்மையும், எங்களுடைய நல்ல, வளர்ச்சிப் பணிகளையும் களங்கப்படுத்தவே இப்படியெல்லாம் செய்கிறார்கள்" என்றார்.


குறிவைக்கப்படுகிறாரா மணீஷ் சிசோடியா?


அனைத்து விதமான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மணீஷ் சிசோடியா, தனக்கு எதிராக சிபிஐயிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று ஜாமீன் மனுவில் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. 


தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை காவலில் எடுத்தது. இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். சிசோடியாவைத் தவிர அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.


அமலாக்கத்துறையின் காவல் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் சிசோடியாவின் காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.


முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு எதிர்கட்சிகளை சேர்ந்த 8 தலைவர்கள் ஏற்கனவே, கடிதம் எழுதியிருந்தனர்.




பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.