Rottweiler: செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், கடந்த சில ஆண்டுகளாகவே பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. செல்லப்பிராணிகள் மட்டும் இன்றி தெருநாய்களும் ரோட்டில் நடமாடும் மக்களுக்கு தொல்லை தந்து வருகிறது.


சென்னையில் அதிர்ச்சி சம்பவம்:


குறிப்பாக, ராட்வெய்லர் செல்லப்பிராணி நாய் வகைகள், மக்களை கடித்து குதறுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 58 வயது முதியவரை இரண்டு ராட்வெய்லர் நாய்கள் சேர்ந்து கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.


அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை ஆவடியில் 68 வயது பெண்ணை இரண்டு ராட்வெய்லர் நாய்கள் கடித்து குதறியது. இதனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அரக்கோணத்தில் இரண்டு ராட்வெய்லர் நாய்கள் கடித்து குதறியதில் அதன் உரிமையாளர் உயிரிழந்தார்.


அதன் தொடர்ச்சியாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நேற்று அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் இரண்டு ராட்வெய்லர் நாய்களும் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை திடீரெனத் தாக்கி, கடித்துக் குதறியது.


ஆபத்தான நாய் வகைகளுக்கு தடையா?


சிறுமியின் தாயார், நாயிடமிருந்து சிறுமியைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால், அந்த இரண்டு நாய்களும், சோனியாவையும் கடுமையாகக் கடித்திருக்கின்றன. தற்போது, மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


பொது மக்களின் உயிருக்கு ராட்வெய்லர் போன்ற நாய் வகைகள் பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், இதுபோன்ற நாய் வகைகளை விற்க தடை செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றததில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.


இதையடுத்து, மூர்க்கமாக நடந்து கொள்ளும் ஆபத்தான நாய் வகைகளை இனப்பெருக்கம் செய்யவும்  வளர்க்கவும் தடை விதித்து மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை உத்தரவிட்டது. ஆனால், முறையான வழிமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறி, மத்திய அரசின் தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.


ராட்வெய்லர் நாய் வகைகள் ஆபத்தானவையா?


ராட்வெய்லர் நாய் வகைகளை தடை செய்ய வேண்டும் என தொடர் குரல் எழுந்து வரும் நிலையில், அதன் வரலாறு பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.



  • வண்டிகளை இழுத்த செல்லவே ராட்வெய்லர் நாய் முதலில் பயன்படுத்தப்பட்டன.

  • வீடுகள், பண்ணைகளை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டது.

  • கால்நடைகளை மேய்க்க பயன்பட்டது. 


ராட்வெய்லர் குறித்து விலங்கு நல ஆர்வலர் மினி வாசுதேவன் கூறுகையில், "அந்த நாய் கருப்பாகவும் திடகாத்திரமாகவும் இருப்பதால் பலர் அதை பார்த்து பயப்படலாம். ஆனால், ராட்வெய்லர் நாய் வகைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. நாயை வளர்க்கும் குடும்பத்திற்கு அது விசுவாசமாக இருக்கும்" என்றார்.


நாய் படையில் 20 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வந்த ஏ. சவுந்தரராஜன், இதுகுறித்து குறிப்பிடுகையில், "ராட்வெய்லர், ஆக்ரோஷமான நாய் வகையாகும். குறிப்பாக, வெளிநாடுகளில் உள்ளவை ஆக்ரோஷமாக இருக்கக்கூடியவை.


அதனால்தான், அவை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு சக்திவாய்ந்த தாடைகள் இருக்கும். கடித்த பிறகும் கூட, தங்கள் பிடியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்காது. மக்களுடன் பழகுவதற்கு ஏதுவாக அவற்றுக்கு சிறு வயதிலிருந்தே பயிற்சி தர வேண்டும்" என்றார்.


தடை செய்துள்ள நாடுகள்:



  • ஈக்வடார்

  • பிரான்ஸ்

  • இஸ்ரேல்

  • இத்தாலி

  • போர்ச்சுகல்

  • ருமேனியா

  • ரஷியா

  • ஸ்பெயின்

  • உக்ரைன்

  • அமெரிக்காவின் பல மாகாணங்களில் ராட்வெய்லர் நாய் வகை தடை செய்யப்பட்டது.