டெல்லி-என்சிஆர் முழுவதிலும் இருந்து நேற்று நூற்றுக்கணக்கான தலித்துகள் புத்த தம்ம தீக்ஷா சமரோவின் ஒரு பகுதியாக புத்த மதத்தைத் தழுவியுள்ளனர். இது டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான வழக்கறிஞர் ராஜேந்திர கௌதமால் நிறுவப்பட்ட ஜெய் பீம் மிஷனால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், சமூக ஆர்வலர் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் உறவினரான ராஜ்ரத்னா அம்பேத்கரும் கலந்து கொண்டார். 


நாம் நம்மை ஒழுங்கமைக்க வேண்டும்


மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தீக்ஷபூமியில் 1956ல் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறினார். இந்து மதத்தில் உள்ள சாதிய பாகுபாடுகளை காரணமாக கருதி அவர் அந்த முடிவை எடுத்தார். அதே போல அவர் வழியில் பலர் தங்களை பவுத்த மதத்தில் இணைத்துக்கொள்கின்றனர். அதனை ஒரு நிகழ்வாக நடத்தி ஆயிரக்கணக்கானோர் புத்த மதத்தை தழுவினர். அமைச்சர் ராஜேந்திர கவுதமன் பேசுகையில், "பானைகளில் தண்ணீர் குடிப்பதற்காகவோ, மீசை வைத்ததற்காகவோ அல்லது குதிரைகளை வைத்திருந்ததற்காகவோ அல்லது குதிரை சவாரி செய்ததற்காகவோ நம் குழந்தைகள் கொள்ளப்படுவார்கள் என்றால், நாம் நம்மை ஒழுங்கமைக்க வேண்டும், நமது சமூகம் ஒழுக்கமான முறையில் ஒன்றுபட வேண்டும்", என்று கூறினார்.


மேலும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு சாதிய அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தி குயின்ட் செய்தி நிறுவனத்திடம் பேசி உள்ளனர். அவர்களில் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த சந்தோஷ் (32) என்பவர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாக தெரிவித்தார். "நான் ஒரு தலித், நான் தொடர்ந்து மாணவர்களிடமிருந்து சாதிய அவதூறுகளை எதிர்கொண்டேன். நான் ஆசிரியர்களிடம் புகார் அளித்தேன், ஆனால் அவர்கள் அதனை தட்டிக்கேட்கவில்லை. என் குடும்பத்தில் பள்ளிக்குச் சென்ற முதல் நபர் நான்தான்", என்றார். 



இப்போலாம் யார் சாதி பாக்குறா?


காஜியாபாத்தில் பால் பால் பண்ணை வைத்துள்ள லலித், 45, மற்றும் நிஷா, 38, தங்கள் மூன்று குழந்தைகளுடன் விழாவில் கலந்து கொண்டனர். முழு குடும்பமும் மதமாற்றத்திற்கான படிவங்களை பூர்த்தி செய்தது. நிஷா அவர்கள் வசிக்கும் இடத்தில், தனது சாதியைச் சேர்ந்த குழந்தைகள் நாற்காலியில் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறினார். "இப்போலாம் யார் சாதி பாக்குறா' என்று கேட்பவர்கள் வந்து நமது சமுதாயத்தைப் பார்க்க வேண்டும். எங்கள் சாதியைச் சேர்ந்த குழந்தைகளை நாற்காலியில் உட்கார அனுமதிப்பதில்லை. என் பிள்ளைகள் அதை எதிர்கொள்ளவில்லை என்றாலும், என்னைச் சுற்றி நடப்பதை நான் பார்க்கிறேன்", என்று அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!


தலித் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்


தென்கிழக்கு டெல்லியில் உள்ள துக்ளகாபாத்தில் இருந்து வந்திருந்த வர்ஷா (29) என்ற பெண்ணுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. "தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எப்போதும் உச்சத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும் செய்திகளில், பெண்கள் தங்கள் சாதியின் காரணமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதைப் பற்றி படிக்கிறோம். இது தான் என்னை பௌத்த மதத்தைத் தழுவ வேண்டும் என்று நினைக்க வைக்கிறது, ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்குத் தான் தீர்வு என்று நினைக்கும்போது பயமாக இருக்கிறது" என்று வர்ஷா தனது தாய் மற்றும் தம்பியுடன் அம்பேத்கர் பவன் வாசலில் நின்றபடி கூறினார்.



40 ஆண்டு புத்த மத பற்றாளர்


86 வயதான மோகன்லால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் புத்த மதத்திற்கு மாறினார். "நான் 1934 இல் பிறந்தேன். நான் பாபாசாகேப் உடன் சில ஆண்டுகள் பணியாற்றி பின்னர் கிராமம் கிராமமாகச் சென்று அவரது கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சென்றேன். பாபாசாகேப்பின் கருத்துக்களை எளிமைப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல நாங்கள் உருவாக்கிய பாடல்கள் அடங்கிய கேசட்டுகள் இன்னும் என்னிடம் உள்ளன. நான் அவற்றை அடிக்கடி கேட்கிறேன். எங்களை வீடுகள் கட்டவோ, நல்ல ஆடைகளை அணியவோ, பள்ளிக்குச் செல்லவோ, கிணறுகளில் இருந்து தண்ணீர் குடிக்கவோ அனுமதிக்கவில்லை. பள்ளிக்கு அருகில் கூட செல்ல அனுமதிக்கவில்லை. இப்போது ஓரளவுக்கு பிரச்சினைகள் குறைந்துள்ளன என்றாலும் எங்கள் அடுத்த தலைமுறைக்கு சாதியின் கொடுமைகளை முற்றிலும் களைய விரும்புகிறோம்", என்றார்.