கடந்த 2020ஆம் ஆண்டு, டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்கள் மீதான கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சே காரணம் என தொடுக்கப்பட்ட வழக்கில், நேற்று டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் நேரத்தின் போது மேடைகளில் பேசுவதும் மற்ற நேரங்களில் பேசுவதும் வேறானவை எனவும், சில நேரங்களில் எந்த நோக்கமும் இல்லாமல் ஒரு சூழலை உருவாக்குவதற்காக ஏதேனும் சொல்லப்படும் எனவும் கூறியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய பிறகு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைதிவழியிலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதன் மூலமாக, நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், மக்களை மத ரீதியாக அரசு அணுகுவதாக எழுந்த எதிர்ப்புகளால் நாடு முழுவதும் முஸ்லிம்களும், ஜனநாயக அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டன.
நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்திருந்த நிலையில், பல்வேறு பாஜக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டதோடு, சிலர் அவர்களின் மீது வன்முறை மேற்கொள்ளவும் பகிரங்கமாக அறிவித்திருந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று பாஜக தலைவர் கபில் மிஷ்ரா வன்முறையோடு போராட்டக்காரர்களை அகற்ற மேடையில் அழைப்பு விடுத்ததையடுத்து, பாஜக ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறை விசாரணையில் ஒருபக்க சாய்வு, ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது முதலான பிரச்னைகள் இருப்பதாக மனித உரிமைகள் ஆணையங்கள் தெரிவித்திருந்தன.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சந்திர தாரி சிங், ஒருவர் புன்னகையோடு எதையேனும் சொன்னால் அதில் குற்றம் இல்லை எனவும், மூர்க்கமாக சொன்னால் அதில் குற்றம் இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியதாக பாஜக அமைச்சர் அனுராஜ் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதியுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தாக்கல் செய்திருந்த மனுவை சிறிய நீதிமன்றம் ஒன்றில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிருந்தா காரத் மேல்முறையீடு செய்திருந்த வழக்கில் நீதிபதி சந்திர தாரி சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
`அவர் பேசியது தேர்தல் நேரத்திலா, மற்ற நேரத்திலா? தேர்தலில் பேசப்படும் பேச்சுகள் வித்தியாசமானவை. மற்ற நேரங்களில் பேசியிருந்தார் அதில் ஏதேனும் குற்றம் இருக்கலாம்.. புன்னகையோடு ஏதேனும் கூறப்படும் போது, அதில் குற்றம் இருக்காது.. மூர்க்கமாக எதையேனும் சொன்னால், அது குற்றம்’ என்று கூறியுள்ள டெல்லி உயர் நீதிமன்றம் தொடர்ந்து, `நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்.. கருத்து சுதந்திரத்திற்கான உரிமையும் இருக்கிறது’ எனவும் கூறியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை ஒத்தி வைத்துள்ளது.