பாலியல் சுரண்டலில் இருந்து 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை பாதுகாப்பதே போக்சோ சட்டத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்ட இருவரின் சம்மதத்துடன் வைத்து கொள்ளும் பாலியல் உறவை குற்றமாக கருது முடியாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.


இந்த கருத்தை, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங் தெரிவித்துள்ளார். தனது 17 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கட்டாய திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கடத்தப்பட்டதாக மைனர் பெண்ணின் தந்தை குற்றம் சாட்டி இருந்தார். 


இது தொடர்பாக தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஜாமீன் வழங்கும் போது நீதிபதி ஜஸ்மீத் சிங் இந்த இக்கருத்து தெரிவித்தார்.


குற்றம்சாட்டப்பட்ட இளைஞன், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முதல் காவலில் வைக்கப்பட்டிப்பதாகக் கூறி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், "சிறுமி தனது சொந்த விருப்பத்தின் பேரில் அந்த இளைஞனுடன் வந்திருக்கிறார்" என வாதம் முன்வைத்தார்.


கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, அந்த சிறுமி அந்த நபரின் வீட்டிற்கு வந்ததாகவும், மறுநாள் அவர்கள் பஞ்சாப் சென்று திருமணம் செய்துகொண்டதாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், அந்த இளம்பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதாக கூறி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை கடந்த ஆண்டு, சிறுமி அணுகியதாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், சிறுமிக்கும் அவரது கணவருக்கும் போதிய மற்றும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.


இந்நிலையில், இதை கருத்தில் கொண்ட நீதிபதி ஜஸ்மீத் சிங், "என் கருத்தின்படி, போக்சோவின் நோக்கம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதாகும். இளம் வயதினருக்கிடையிலான ஒருமித்த காதல் உறவுகளை போக்சோ சட்டம் ஒருபோதும் குற்றமாக கருதவில்லை. இருப்பினும், ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளிலிருந்து இது பார்க்கப்பட வேண்டும். 


பாலியல் குற்றத்தில் இருந்து தப்பியவர், அழுத்தம் அல்லது அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடலாம். அரசு வழக்கறிஞரின் முன்னிலையில் அறையில் இருந்த சிறுமியுடன் உரையாடினேன். திருமணம் நடைபெற்றபோது சிறுமிக்கு 17 வயது. அப்போது, எந்த விதமான செல்வாக்கு, அச்சுறுத்தல், அழுத்தம் அல்லது வற்புறுத்தலுக்கு உட்படாமல், தனது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாகவும், இன்றும் அவருடன் இருக்க விரும்புவதாகவும் சிறுமி கூறினார்" என்றார்.