கடந்த 2019ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தில் தனது மகள் காணவில்லை எனக் கூறி தந்தை ஒருவர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.


பின்னர், சம்பல் மாவட்டத்தில் இருந்து சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டார். அப்போது, அவர் ஒரு நபருடன் தங்கி இருந்தது தெரிய வந்தது.


பின்னர், மாஜிஸ்திரேட் முன்பு அவர் அளித்த வாக்குமூலத்தில், அந்த நபர் தனது காதலன் என்றும் அவருடன் ஒன்றரை மாதம் தங்கியிருந்ததாகவும் அவர் கூறினார். மேலும், தனது சம்மதத்துடன் அவர் தன்னிடம் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும் அவருடன் இருக்கவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் ஆதார் அட்டையில் பிறந்த நாள் தேதியை மாற்றியதாகவும் அந்த நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பிணை கோரி அந்த நபர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங், சிறார் இடமிருந்து பெறப்படும் சம்மதம் சட்டத்தின் முன்பு சம்மதமாக ஏற்று கொள்ளப்படாது எனக் கூறி குற்றம்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.


"ஆதார் அட்டையில் சிறுமியின் தேதியை மாற்றும் அந்த நபரின் நடத்தை மிக மோசமானது. சிறுமியுடன் பாலியல் உறவை வைத்து கொள்வதற்காக ஆதார் அட்டையில் பிறந்த தேதியை மாற்றி இருப்பது போல தெரிகிறது. 


 






குறிப்பாக, மனுதாரருக்கு 23 வயது இருக்கும்போது, அவருக்கு திருமணம் ஆகி இருப்பதை கருத்து கொண்டால், அவர் பிணை வழங்க தகுதியற்றவராக கருதப்படுகிறார். 16 வயது சிறுமியின் சம்மதம் என்பது சட்டத்தின் முன்பு சம்மதமே இல்லை.


தற்போதைய வழக்கில், சம்பவம் நடந்த தேதியில் சிறுமிக்கு 16 வயது மட்டுமே இருக்கும் என்று நான் கருதுகிறேன். விண்ணப்பதாரருக்கு 23 வயது. ஏற்கனவே திருமணமானவர். 


சிறுமியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், அவர் சிறிமியிடம் தொடர்பு கொண்டதாகவும், விண்ணப்பதாரர்தான்  துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவரது பிறந்த தேதியைப் மாற்றியதாகவும் சிறுமி தெரிவித்தார். 


பாலியல் உறவு நடக்கும்போது, அவர் சிறுமி அல்ல என்பதை நிரூபிக்கவே 2002 ஆம் ஆண்டில் இருந்து 2000 ஆம் ஆண்டாக ஆதார் அட்டையில் பிறந்த தேதி மாற்றப்பட்டுள்ளது" என நீதிபதி தெரிவித்தார்.